கோத்தாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு தடை விதிக்கும் உத்தரவுக்கு சட்டமா அதிபர் எதிர்ப்பு!
26 Mar,2018
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு நீடிக்கப்படுவதற்கு சட்டமா அதிபர் எதிர்ப்புத் தெரிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று அறிவிக்கப்பட்டது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு நீடிக்கப்படுவதற்கு சட்டமா அதிபர் எதிர்ப்புத் தெரிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று அறிவிக்கப்பட்டது.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக பொலிஸ் நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையுத்தரவை நீடிக்க வேண்டாம் என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரட்ன ரிட் மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார்.
டி.ஏ.ராஜபக்ச நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா பொது மக்களின் பணத்தைப் பயன்படுத்தியதாக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி களான பத்மன் சுரசேன, ஷிரான் குணரட்ன ஆகியோர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீடித்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இரு தரப்பினரும் அன்றைய தினம் வாதங்களை முன்வைக்கவுள்ளனர்.
இந்த வழக்கில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சீ.ஐ.டி பணிப்பாளர் ஷானி அபயசேகர, நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ரவி வைத்தியாலங்கார மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். பொது சொத்துக்கள் சட்டத்தின் 8 (1) சரத்தின் கீழ் மோசடிசெய்ததாக பதிவுசெய்யப்பட்டுள்ள சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு பதில் அளிப்பதிலிருந்து தவித்துக் கொள்வதற்கும் ரிட் மனுவொன்றையும் ராஜபக்ச தரப்பு தாக்கல் செய்துள்ளது.