இலங்கையில் அவசர நிலை பிரகடனம் ரத்து: அதிபர் மைத்ரிபால சிறிசேனா
18 Mar,2018
இலங்கையில் கடந்த ஓராண்டாக, பெரும்பான்மையினரான புத்த மதத்தினருக்கும், சிறுபான்மை இனத்தவராகிய இஸ்லாமிய மதத்தினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், புத்த தொல்பொருள் இடங்களை சேதப்படுத்தி வருவதாகவும் புத்த மதத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மியான்மரில் புத்த மதத்தினருக்கும், சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம்களுக்கும் பிரச்சினை உள்ள நிலையில், ரோஹிங்யா முஸ்லிம்கள் இலங்கையில் தஞ்சம் அடைவதற்கு புத்த மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் மத்திய கண்டி மாவட்டத்தில் இரு மதத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் உயிரிழந்தனர். கண்டியில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவரின் கடை தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவங்களை தொடர்ந்து அங்கு கலவரம் மூண்டது.
இதன்காரணமாக தெல் தெனியா பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதே போன்று பல இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நடந்து உள்ளன. இது சிறிசேனா அரசுக்கு தலைவலியாக அமைந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்துவது என அதிபர் சிறிசேனா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திற்கு பிறகு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதனால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 20 வருடம் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், இலங்கையில் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. இதனை அடுத்து அவசர நிலை பிரகடனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.