இலங்கை: ஃபேஸ்புக் மீதான தடை நீக்கம்
15 Mar,2018
இலங்கையில் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்செயல்களை அடுத்து கொண்டு வரப்பட்ட ஃபேஸ்புக் மீதான தடையை இலங்கை அரசாங்கம் சுமார் ஒரு வாரத்துக்கு பின்னர் நீக்கியுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தினருடன் ஜனாதிபதியின் செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இந்த தடை நீக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
தனது அறுவுறுத்தலின் பேரில், ஃபேஸ்புக் நிறுவன அதிகாரிகளுடன் தனது செயலர் பேசியதாகவும், அதில், வன்செயல்களை தூண்டவும், வெறுப்புணர்வுப் பேச்சுக்களை தூண்டவும் அனுமதிக்க மாட்டோம் என்று அந்த அதிகாரிகள் உத்தரவாதம் தந்ததாகவும் தனது டுவிட்டரில் ஜனாதிபதி கூறியிருந்தார். ஜனாதிபதி தற்போது வெளிநாட்டு விஜயத்தில் உள்ளார்.
மார்ச் மாதம் 7 ஆம் தேதி ஃபேஸ்புக், வைபர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை இலங்கை அரசாங்கம் தடை செய்தது. கண்டியில் சிங்கள – முஸ்லிம் மோதலை அடுத்து அந்தத் தடை வந்தது.
கண்டி வன்செயல்களில் 3 பேர் உயிரிழந்தனர். பள்ளிவாசல்கள் உட்பட முஸ்லிம்களின் சொத்துகளுக்கு பலத்த சேதம் ஏற்படுத்தப்பட்டது.
வாட்சப் போன்றவை நேற்றே செயற்படத்தொடங்கிவிட்ட நிலையில் ஃபேஸ்புக் மாத்திரம் இன்றுவரை தடுக்கப்பட்டிருந்தது.