இலங்கை கலவரம் குறித்து ஆய்வு செய்ய 3 நீதிபதிகள் குழு நியமனம்
10 Mar,2018
இலங்கை கண்டி மாவட்டத்தில் புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த 4-ந் தேதி மோதல் ஏற்பட்டது. பின்னர் அது இனக் கலவரமாக மாறியது. அதில் முஸ்லிம்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். முஸ்லிம்களின் கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மசூதிக்கும் தீ வைக்கப்பட்டது.
அதை தொடர்ந்து மேலும் கலவரம் பரவாமல் தடுக்க இலங்கை முழுவதும் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதற்கான உத்தரவை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பிறப்பித்தார். அதை தொடர்ந்து இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இருந்தாலும் இலங்கையில் ஆங்காங்கே தொடர்ந்து கலவரங்கள் நடந்து வருகிறது. கண்டி மாவட்டத்தில் தலைவிரித்தாடிய இனக்கலவரம் மாத்தளை மற்றும் பதுளை பகுதிகளுக்கும் பரவியது. அங்கு குண்டர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. மாத்தளை மற்றும் மதியங்கனையில் பள்ளிவாசல் மற்றும் பெட்ரோல் பங்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதால் ஆங்காங்கே மோதல்கள் ஏற்பட்டன.
நேற்று முன்தினம், கொழும்பு ரத்னமலானை பகுதியில் முஸ்லிம்கள் மற்றும் புத்த மதத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் மேல்மாகாண சபை உறுப்பினர் அமல்சில்வா படுகாயம் அடைந்தார்.
இதற்கிடையே நேற்று கண்டியில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்டியில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை தீவிரவாத சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே கலவரம் பாதித்த கண்டி பகுதியில் அதிபர் சிறிசேனா பிரசாரம் செய்தார். அப்போது கலவரக்காரர்களை ஒடுக்க மேலும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள உத்தர விட்டார். இதனால் கண்டி பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதியில் கலவரம் சற்று ஓய்ந்துள்ளதால் அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு அரசு திரும்பப் பெற்றுள்ளது. மேலும் கலவர பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மூன்று ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு திரும்பிப் பெறப்பட்ட பின்னும், அப்பகுதியில் ராணுவத்தினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.