இலங்கை: 10 மார்ச் 2018சமூக வலைதளங்கள் செயல்படும்
09 Mar,2018
இலங்கையில் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டியதால் கடந்த புதன்கிழமையன்று முதல் தடை செய்யப்பட்ட சமூக வலைத்தள சேவைகள் நாளை சனிக்கிழமை முதல் மீண்டும் செயல்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர வழங்கிய தகவல்களில், சமூக வலைத்தளங்களை தடை செய்ததற்கு கண்டனம் தெரிவிக்க இலங்கை தொலைபேசி ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவை, இலங்கை மனித உரிமைகள் ஆணையம் அழைத்திருந்ததாக கூறியுள்ளார்.
ஆணையத்தின் முன்பாக தொலைபேசிகளை ஒருங்குபடுத்தும் ஆணைக்குழு ஆஜராகி நிலைமைகளை விவரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சமூக வலைத்தளங்கள் மூலமான தொடர்பாடல் ஒரு மனித உரிமைதான் என்றாலும் நாட்டின் பாதுகாப்பு எல்லாவற்றைவிட முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த புதன்கிழமை முதல் இலங்கை முழுவதும், ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வைபர், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை
இதற்கிடையே இன்று வெள்ளைக்கிழமை கண்டி மாவட்டத்தில் தாக்குதலுக்கு உள்ளான பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்கள் தங்கள் தொழுகையை பொது இடங்களில் நடத்தியுள்ளனர்.
பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு, சேதமடைந்ததன் காரணமாக இவ்வாறு பொது மைதானங்களில் ஏனைய இனத்தவரின் உதவியுடன் இவர்கள் தொழுகையை நடத்தியுள்ளனர்.
பாதுகாப்பு , இடம்பெயர்வு, பெண்களை வீட்டில் தனியே விட்டுவர முடியாமை ஆகிய காரணங்களால் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே தொழுகைக்கு வந்ததாக கூறப்படுகின்றது.
கண்டி மாவட்டத்தின் மாநகர சபை எல்லையை தவிர ஏனைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 8 மணிமுதல் நாளை காலை 5 மணி வரை அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.
அங்கு நிகழ்ந்த வன்முறைகளை தொடர்ந்து மூடப்பட்ட கண்டி மாவட்ட பள்ளிக்கூடங்கள் திங்களன்று செயல்பட தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.