பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் முடக்கம் :
09 Mar,2018
முகப்புத்தகம் எனும் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களை முடிக்கியுள்ள அரசாங்கம் அவற்றை கட்டுப்படுத்தியுள்ளது.
நேற்றுமுற்பகல் முதல் இந்நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த சமூக வலைத்தளங்களை மேற்பார்வை செய்யும் விசேட பொறிமுறை ஒன்றும் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட மேற்பார்வை நடவடிக்கைகள் தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பொறியியலாளர்களால் வகுக்கப்பட்டுள்ள முறைமைகளே கடைபிடிக்கப்படுவதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
இனவாதத்தை தூண்டும் அல்லது சேதங்களை ஏற்படுத்தும் பதிவுகளை தடை செய்யும் முகமாக இந்த சிறப்பு திட்டங்கள் அமைந்திருக்கும் என தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்தது.
இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதால் குறித்த சமூக வலைத்தளங்கள் ஊடான தகவல் பரிமாற்றங்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களின் இயக்கம் மிக மந்த கதியில் இருந்தது.
கண்டி உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள இனவாதத்தை தூண்டும் வகையிலான அறுவறுக்கத்தக்க சம்பவங்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவு ஜனாதிபதிக்கு கொடுத்துள்ள விசேட அறிக்கையில் இவ்வாறான சம்பவங்கள் பரவலடைய சமூக வலைத்தளங்களே காரணம் என கண்டறியப்பட்டது.
அதனூடாகவே வன்முறையாளர்கள் ஒன்றிணைவதும் கண்டறியப்பட்டது. இந்நிலையிலேயே பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக சமூக வலைத்தளங்கள் மேற்பார்வை செய்யப்பட்டு அதன் இயக்கம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சமூக வலைத்தள ஆர்வலர்கள் அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் இந்நடவடிக்கையானது அவர்களின் இயலாமையை வெளிப்படுத்துவதாகவும் இந்நடவடிக்கை ஊடாக உண்மைப் பிரச்சினை தீரப்போவது இல்லை எனவும் இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் இரடி கமகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை முதலில் கண்டி மாவட்டத்தில் சமூக வலைத்தளங்கள் செயலிழந்தன. அதனை அடுத்து கொழும்பு உள்ளிட்ட நாடு முழுவதும் இந்த பேஸ்புக், வட்சப், மற்றும் வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடங்கின இதனால் பொதுமக்கள் விசனம் தெரிவித்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக வெளிநாடுகளில் இருக்கும் உறவினர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடும் உறவினர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
இது தொடர்பில் நேற்று அரசாங்கத் தகவல் தினைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரட்ன சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் இனவாத பிரசாரங்கள் தொடர்பில் அமைச்சரவையில்பேசப்பட்டது. எனவே தற்போது அரசாங்கம் அதுதொடர்பாக நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றார்.