இலங்கை உள்ளாட்சித் தேர்தல் - முதலிடத்தில் ராஜபக்சே கட்சி !
12 Feb,2018
இலங்கை முழுவதும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே சார்ந்துள்ள புதிய கட்சி அதிக இடங்களைப் பிடித்துள்ளது. இப்போதைய அதிபர் சிறீசேனாவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சி குறைவான இடங்களைப் பெற்று, மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 10-ம் தேதியன்று இலங்கையில் உள்ள 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 278 பிரதேச சபைகள் உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. இலங்கையின் தேசிய அரசாங்கத்தில் கூட்டாக இருக்கும் அதிபர் சிறீசேனாவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சி, பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இதில் தனித்துப் போட்டியிட்டன. யாழ்ப்பாணத்தை உள்ளடக்கிய வடக்கு மாகாணம் உட்பட சில இடங்களில் மட்டும் சிறிசேனாவின் கட்சி தனியாகவும், மற்ற பகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பெயரிலும் போட்டியிட்டது.
முன்னாள் அதிபர் மகிந்தவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணி என்ற கட்சியும், தனி அணியும் போட்டியிட்டன. இந்தக் கட்சியானது சந்திரிகா, ரணில், மகிந்த மூவரின் அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தொடங்கியது மட்டுமின்றி, அதிகாரப்பூர்வமாக அவரின் தலைமையில் செயல்பட்டுவருகிறது.
இந்தத் தேர்தலில் ஆளும்கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளுமே பலத்த அடி வாங்கின. அதிக (44.65%) வாக்குகளைப் பெற்ற பொதுஜன முன்னணிக்கு, 3,369 இடங்கள் கிடைத்துள்ளன. 32.63% வாக்குகளைப் பெற்ற ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 2,385 இடங்கள் கிடைத்தன.
அதிபர் சிறிசேனாவின் (சுதந்திரக் கட்சிக்கு 4.44%+ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு 8.94%)தரப்புக்கு 13..38% வாக்குகளோடு 1,032 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
அகில இலங்கை நிலவரப்படி, சிங்கள இனவாத இடதுசாரி கட்சியான ஜேவிபி 6.27% வாக்குகளுடன் 431 இடங்களைப் பெற்றது. இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு, 3.07% வாக்குகளுடன் 407 இடங்களைப் பிடித்துள்ளது.