தலைமை அமைச்சர் ரணிலின் பொக்கற்றில்தான் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உள்ளார் என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்திருந்த நிலையில், அவரின் குற்றச்சாட்டுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் இரா.சம்பந்தன்.
2011ஆம் ஆண்டு அதாவது மகிந்த அரச தலைவராகப் பதவி வகித்த காலத்தில் அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்புக்கள், மகிந்த தலைமையிலான அரசு தம்மை நடத்திய, நடந்துகொண்டவிதம் உள்ளிட்ட பல விடயங்களை இரா.சம்பந்தன் திருகோணமலையில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்றில் வைத்து வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் தனது உரையின்போது, கடந்த 2011ஆம் ஆண்டு அரசுடன் நடைபெற்ற பேச்சுக்களின்போது மகிந்த ஒரு தடவை ‘தெரிவுக்குழுவுக்கு வராவிட்டால் உமக்கு ஆபத்து ஏற்படலாம்’ என்று எச்சரித்தார் எனவும் சம்பந்தன் வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்மூலம் ‘இத்தனை மிரட்டல்கள் எச்சரிக்கைகள் இருந்தும் உமது பொக்கற்றில் விழாத நானா ரணிலின் பொக்கற்றில் விழுந்துவிடப் போகிறேன்’ என்று தெரிவிக்கும் விதமாக கடந்த கால நினைவுகள் பலவற்றையும் தூசுதட்டி விட்டுள்ளார் இரா.சம்பந்தன். மகிந்தவுக்கு இது புரியதோ இல்லையோ தமிழ் மக்கள் துல்லியத்தன்மையுடன் புரிந்துகொள்வர், பிரித்தறிந்து கொள்வார்கள்.
மகிந்த யார்? அவர் எப்படிப்பட்டவர்? சிறுபான்மையின மக்களை எந்த மட்டத்தில் வைத்துள்ளார் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவர். ஆதலால் அவர் சம்பந்தன் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோது அவை நகைப்புக்கு இடமானவையாகவே தமிழர் தாயகத்தால் நோக்கப்பட்டன.
அதிலும் தீர்வு குறித்து பேச்சு நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தம்மால் அழைப்பு விடுக்கப்பட்டது என்றும் அதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்தது என்றும் மகிந்த தெரிவித்துள்ளமை பரிகாசத்துக்கு உரியதொன்று.
ஏனெனில், தற்போதைய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கூட்டு அரசுடன் இணைந்து புதியதொரு அரசமைப்பை உருவாக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறங்கியபோது, அரசமைப்பின் உருவாக்கத்தில் காத்திரமான பங்களிப்பை வழங்கிச் செயற்பட்டுக் கொண்டிருந்தபோது அரசமைப்புக்கு எதிராக இனவாத முழக்கங்களை எழுப்பியவர்களுள் முக்கியமானவர் மகிந்தவே.
அவரும் அவரது சகாக்களும் இணக்கப்பாட்டுடன் இருந்திருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளுடன் சிறுபான்மை இனங்களுக்குச் சாதகமானதொரு அரசமைப்பு மலர்ந்திருக்க வாய்ப்புக்கள் மிக அதிகம்.
புதிய அரசமைப்பு உருவானால், வடக்கு – கிழக்கு இணைந்தால் மாகாணங்கள் உச்ச அதிகாரத்தைப் பெற்றுத் திகழும். அது தமிழர் தாயக்தை உருவாக்கும். இதற்காகவா எமது சிப்பாய்கள் தமது இன்னுயிரைத் தியாகம் செய்தனர் என்று சிங்கள் மக்கள் மத்தியில் உச்சக்கட்ட விஷமப் பரப்புரையை மகிந்த முன்னெடுத்திருந்தார். இவ்வாறான ஒருவரின் ஆட்சியில் அவரின் தலைமையில் தமிழர்களுக்கு வழங்கப்படும் அல்லது முன்வைக்கப்படும் தீர்வு எந்தளவுக்கு நடுவு நிலையானதாகவும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலும் இருந்திருக்கும்.
ஆக, தமிழ் மக்களுக்கு ஏற்பில்லாத, தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்காத ஒரு தீர்வுத் திட்டத்தை அது தொடர்பான பேச்சுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்தாலும் அது வரவேற்கத்தக்கதே. தமிழர் தாயகத்தில் தான்தோன்றித்தனமாக கருத்துக்களின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தலாம் என்ற எண்ணப்பாட்டில் மகிந்த தொடர்ந்து செயற்படுவாராயின் அது பிற்போக்கான சிந்தனையே