இத்தாலியில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடி செய்த நபர் 23 கடவுச்சீட்டுக்களுடன் கைது
27 Jan,2018
இத்தாலியில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து பணம் மோசடி செய்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இத்தாலியில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பணம் மோசடி செய்த நபர் ஒருவர் பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியில் தொழில் பெற்றுக்கொள்வதற்காக சந்தேக நபருக்கு பணம் வழங்கிய நபர் ஒருவர் தொழில் கிடைக்கப்பெறாத காரணமாக பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன் பிரகாரம் செயற்பட்ட பணியக அதிகாரிகள் மேற்கொண்ட இரகசிய விசாரணை ஒன்றின் பின்னர் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர். ரத்மலானை பிரதேசத்தைச்சேர்ந்த சந்தேக நபர், தனது காரிலே நடமாடும் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்திச்சென்றுள்ளார். அத்துடன் குறித்த காரில் இருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் 23 மற்றும் இத்தாலிக்கான தொழில் ஒப்பந்த பத்திரங்கள் 9 கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வேறு சந்தேக நபர்கள் இருக்கின்றனரா என பணியக விசாரணைப்பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் சட்டபூர்வமான அனுமதிப்பத்திரம் இல்லாமல் நபர்களை வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தமை மற்றும் பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் நேற்றைய தினம் கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவிக்கையில், இவ்வாறான மோசடி காரர்களுக்கு எதிராக சட்டத்தை நிலை நாட்ட ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. இதுபோன்ற மோசடிகாரர்கள் தொடர்பில் தகல் தெரிந்தவர்கள் பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவுக்கு அறிவிக்குமாறு பொது மக்களை கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.