தமிழக மீனவர்களுக்காக தனிச்சட்டம் இயற்ற முடியாது: இலங்கை அரசு
27 Jan,2018
எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்காக தனிச்சட்டம் இயற்ற முடியாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
எல்லை தாண்டும் மீனவர்களுக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.15 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில் இலங்கை அரசு சட்டம் நிறைவேற்றியது.
இதற்கு தமிழக மீனவர்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வர அழுத்தம் கொடுக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.
பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியது குறித்து இலங்கை அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று பதிலளித்துள்ளார்.
அதாவது, இலங்கை எல்லைக்குள் மீன் பிடிக்க தமிழர்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தமிழக மீனவர்களுக்கு என புதிய சட்டம் நிறைவேற்ற முடியாது என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
மேலும், போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு தமிழக மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்க வேண்டும். தமிழக மீனவர்களுக்காக சட்டத்தில் எந்த திருத்தத்தையும் செய்ய முடியாது என்று மஹேந்திர அமர வீர பதிலளித்துள்ளார்.