ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை தான் பொறுப்பேற்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு
24 Jan,2018
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் பாரிய ஊழல், மோசடிகள் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் சரியாகவும் முறையாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ளும் பொறுப்பை ஜனாதிபதி என்றவகையிலும் தனிப்பட்ட முறையிலும் தான் பொறுப்பேற்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
மத்திய வங்கி பிணைமுறை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் சில பக்கங்களை காணவில்லையென சிலர் கூக்குரலிட்டபோதும் அதில் பக்கங்கள் எதுவும் குறைவடையவில்லையென்றும் சில சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்வரை அந்த ஆவணங்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அதனை வெளியிடுவதன் மூலம் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்கள் நன்மை அடைவதற்கு சந்தர்ப்பம் இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நேற்று (23) பிற்பகல் புறக்கோட்டை ஐக்கிய வியாபாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பல வருட காலமாக வாக்களித்தபோதும் கடந்த 25 வருட காலப்பகுதியில் அம்மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அம்மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அம்மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளுக்கு அவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட அனைவரும் வகைகூறவேண்டும் என்றும் தெரிவித்தார்.
நகரத்தை அழகாகவும் தூய்மையாகவும் பேணுகின்ற அதேநேரம் மக்களின் வாழ்க்கையை அழகுபடுத்துவது மிகவும் அவசியமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், புறக்கோட்டை சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளினதும் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களினதும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முறையான நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கான அங்கத்துவ அட்டைகள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.
அமைச்சர் பைஸர் முஸ்தபா, சந்திம வீரக்கொடி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், புறக்கோட்டை ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் சம்பத் சமிந்த விதானகமகே உள்ளிட்ட பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.