யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மேலும் 131 இந்திய வீடுகள்
21 Jan,2018
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மேலும் 131 குடும்பங்களுக்கான 3 ஆவது கட்ட இந்திய வீட்டுத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் இந்த வீடமைப்புத் திட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட 5000 இந்திய வீட்டுத் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2871 வீடுகள் முன்னாள் அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ் இனது நிருவாகக் காலகட்டத்தில் பூரணமாகவும் வெற்றிகரமாகவும் அமைக்கப்பட்டன.
அதன் முழுமையான வெற்றியையடுத்து அரசாங்க அதிபர் சறோஜினிதேவியின் வேண்டுகோளுக்கு அமைய மேலதிகமாக மேலும் 270 வீடுகள் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டன.
அதனையடுத்து ஏனைய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாது விடுபட்ட மேலும் 131 வீடுகளையும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கும் விஷேட திட்டத்தின் கீழ் தற்போது 3ஆவது கட்ட இந்திய வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
house__2_.JPG
வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக ஆராய மட்டக்களப்புக்கு வந்த இந்திய அதிகாரிகள் குழுவில், புது டில்லியிலுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளரும் நிதியியல் ஆலோசகருமான கலாநிதி சுமீத் ஜெராத் தலைமையில் அபிவிருத்தி மற்றும் கட்டுமானத் துறையின் ஆலோசகர் பங்கஸ் குமார் சிங், பதவி நிலைச் செயலாளர் கலாநிதி எம். சிவகுரு, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்திப் பிரிவு கவுன்சிலர் டி.சி. மஞ்சுநாத், பொருளாதார வர்த்தகப் பிரிவு முதல் செயலாளர் சுஜா மேனன் ஆகியோர் அடங்கியிருந்தனர்.
கலந்துரையாடலில் கலந்து கொண்ட உள்ளுர் அதிகாரிகள் சார்பில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன், போரதீவு பற்று பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி, மண்முனை மேற்கு பதில் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், உள்ளிட்டோரும் இன்னும் பல அதிகாரிகளும் பங்கேற்றனர்.