10 இலட்சம் கோடி ரூபா எங்கே?;மகிந்த கூறவேண்டும்
11 Jan,2018
கடந்த ஆட்சிக்காலத்தில் 10,000 பில்லியன் ( 10 இலட்சம் கோடி) ரூபாவுக்கு என்ன நடந்ததென மகிந்த ராஜபக்ஷ கூறவேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுள்ளார்.
கொழும்பு பொரளை கெம்பல் மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கேள்வி எழுப்பினார். இங்கு அவர் மேலும் பேசுகையில்;
2008 முதல் 2015 வரையான காலப்பகுதியில்தான் 10,000 பில்லியன் ரூபா இல்லாது போயுள்ளது.
அதிமாக ஊழியர் சேமலாப நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 4000 பில்லியன் ரூபா, நிதிச் சபையின் அனுமதியின்றி ஏலத்தில் விடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பாக அவர்களிடம் கேட்க வேண்டும். யாரும் பயப்பட வேண்டாம், 10,000 பில்லியன் ரூபா கடனை மகிந்த விட்டுச் சென்றுள்ளார்.
நான் நேற்று அஸ்கிரிய பீடத்திற்கு சென்ற போது பிணை முறி அறிக்கை தொடர்பாக என்ன செய்வீர்கள் என கேட்கப்பட்ட போது, அந்த விடயம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நான் கூறினேன்.
இப்போது மகிந்தவிடம் சென்று அதேபோன்று கேட்க வேண்டும். 10,000 பில்லியனுக்கு என்ன நடந்தது எனக் கேட்க வேண்டும்.
ஏன் ஊடகங்கள் அதற்கு அஞ்சுகின்றன. 10 பில்லியன் திருடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனை விடவும் 10 மடங்கு அதிக திருட்டு முன்னர் நடந்துள்ளது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேட்போம்.
நான் மத்திய வங்கி ஆளுநருடன் கதைத்து ஆவணங்களை பாதுகாக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. யார் அந்த 10,000 பில்லியன் ரூபாவை திருடியது. இதனைத் தேட வேண்டும். இது பற்றி, நடவடிக்கை எடுக்க தானும் தயார் எனத் தெரிவித்துள்ளார்.