ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது இராணுவத்திற்கு சாதகமான ஓர் அறிக்கையை விடுத்துள்ளார். யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படமாட்டார்கள் என்று பகிரங்கமாகக் கூறியுள்ளார். எனவே, இராணுவத்திற்கு உள்நாட்டு விசாரணைகளுக்கு முகங்கொடுக்க இலகுவாக இருக்கும். ஆனாலும் யுத்தக்குற்றம் நாட்டில் இடம்பெறவில்லை என்பதே எனது நிலைப்பாடாகும் என்று இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், அமெரிக்க இராணுவம் தம்மிடத்தில் உள்ள திறமைகளைக்கொண்டு பயனடைந்ததாகவும், அதனால் தாம் அமெரிக்க உளவாளி என்று அர்த்தப்படுத்தப்படுவதும் போலியான குற்றச்சாட்டுகளை எழுப்புவதும் புரிதலில் உள்ள குறைபாடெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகமொன்றிற்கு அவர் வழங்கியுள்ள செவ்வியொன்றின்போதே மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அவர் வழங்கிய செவ்வியின் முழு வடிவம் வருமாறு:
கேள்வி: நீங்கள் இராணுவத்தில் இணையும் போது எவ்வாறான நோக்கத்துடன் இணைந்தீர்கள்? இராணுவத்தின் உயர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உங்களுக்கு இருந்
ததா?
பதில்: நான் இராணுவத்தில் இருந்தபோது யுத்தம் இருக்கவில்லை. அவ்வாறு யுத்தமில்லாமல் சமாதான காலத்தில் இராணுவத்தில் இணைந்த இருவர் மாத்திரமே இன்று இராணுவத்தில்
உள்ளோம். குறிப்பாக, நான் கல்வி கற்ற ஆனந்தா கல்லூரியின் அதிபர் எங்களிடத்திலிருந்த திறமைகளை அறிந்து நாங்கள் இராணுவத்தில் இணைந்துக்கொள்ள தகுதியானவர்கள் என்று கூறுவார்.
கேள்வி: அவ்வாறாயின் பாடசாலை காலத்தி லிருந்தே இராணுவத்தில் இணைந்துகொள்ளும் நோக்கம் உங்களுக்கு இருந்ததா?
பதில்: ஆம். ஆர்வம் இருந்தது. அப்போதைய காலத்தில் பாடசாலை அதிபரே என்னை இராணுவத்தில் இணைந்துகொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
கேள்வி: நீங்கள் இராணுவத்திலிருந்து ஏன் அவசரமாக வெளிநாடு சென்றீர்கள்?
பதில்: குறிப்பாக, 2010ஆம் ஆண்டில் இராணுவத்திலிருந்து ஓய்வூதியம் கூட வழங்கப்படாமல் வெளியேற்றப்பட்ட 10 பேரில் நானும் ஒருவன். அப்போது இராணுவத்திலிருந்து விலகினேன். ஆனால், விருப்பத்துடன் விலகவில்லை. அதன் பின்னர் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றினேன். அமெரிக்க இராணுவத்துடன் இணைந்தே இந்த நாடுகளில் சேவையாற்றினேன். அதன் பின்னர்தான் 2015ஆம் ஆண்டுஇலங்கைக்கே மீண்டும் வர வாய்ப்புக் கிடைத்தது.
கேள்வி: முன்னாள் கடற்படைத் தளபதி ட்ரவிஸ் சின்னையாவுக்கு அமெரிக்க உளவாளி என்ற குற்றச்சாட்டு இருந்தது. அவ்வாறாயின் அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து பணியாற்றி நீங்களும் அமெரிக்க உளவாளியாகக் கருதப்படுவீர்களா?
பதில்: உளவாளி என்பது அவரவர் வழங்கும் அர்த்தத்தைப் பொறுத்தே அமையும். எவர் வேண்டுமானாலும் போலி குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும். எவ்வாறாயினும் அந்த நாட்டில் உள்ளவர்கள் எனது திறமையைக்கொண்டு பயன்பெற்றார்கள் என்பதே மெய்யான விடயமாகும். அத்துடன், தற்போது அமெரிக்க இராணுவத்துடனான தொடர்புகளையும் நான் பேணவில்லை.
கேள்வி: சரி அது ஒருபுறமிருக்க, நீங்கள் தற்போது இந்த நாட்டின் இராணுவத் தளபதி. இதற்கு முன்னர் மற்றுமொரு நாட்டில் பணியாற்றியுள்ளீர்கள். அவ்வாறாயின் முன்னர் பணியாற்றிய நாட்டுடன் முழுமையாக தொடர்பை அறுத்துக்கொள்வது சாத்தியமா?
பதில்: நிச்சயமாக. காரணம் அமெரிக்காவில் ஒப்பந்த அடிப்படையிலேயே இணைந்து சேவையாற்றியுள்ளேன். அதனால் நாங்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்களை வைத்து எங்களிடத்திலிருந்து பயன்பெறுவது பற்றியே நாட்டு மக்களும் சிந்திக்க வேண்டும். குறிப்பாக, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் யுத்தம் இலங்கையில் போன்று சீராக முற்றுப்பெறவில்லை. அதனால் அந்த நாடுகளில் கற்றுக்கொண்ட பாடங்கள் எமது நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாதவாறு அவதானத்துடன் செயற்படுவதற்கும் இராணுவத்தை வழிநடத்துவதற்குமான பாடங்களைப் பெற்றுத்தந்துள்ளது.
கேள்வி: இராணுவத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலையீடு இல்லாமல் தீர்மானங்களை எடுக்க முடியுமா?
பதில்: இராணுவக் கட்டமைப்பைப் பார்க்கின்றபோது முதலில் பாதுகாப்பு அமைச்சு பதவி நாட்டின் தலைவரான ஜனாதிபதியிடத்தில் இருக்கும். அடுத்த இடத்தில் பாதுகாப்புச் செயலாளர் இருப்பார். அவருக்கு அடுத்தபடியாக சீ.டி.எஸ். என்ற ஒரு பதவி உள்ளது. அவர்களுக்கு அடுத்தபடியாக நாட்டின் முப்படைத் தளபதிகள் உள்ளனர். அப்போது முப்படை செயற்பாடுகளின்போது ஒருங்கிணைப்பு செயற்பாடுகளை பாதுகாப்புச் செயலாளர் முன்னெடுக்க முடியும்.
அதனையடுத்து இராணுவத்திற்கு ஏதேனும் கட்டளைகளை வழங்கும் அதிகாரம் இராணுவத் தளபதிக்கே உரியதாகும். எவ்வாறாயினும் பெரும் செயற்பாடுகளின்போது அனைவரினதும் கூட்டு ஆலோசனைகள் அவசியப்படும் என்பதையும் மறுக்க முடியாது.
கேள்வி: அவ்வாறாயின் இராணுவத் தளபதி ஒருவரால் தனித்து தீர்மானம் எடுக்கமுடியாது என்பதையா கூறுகின்றீர்கள்?
பதில் : இராணுவத் தளபதியால் தனித்து ஒரு தீர்மானத்தை எடுக்க முடியாது. நிச்சயமாக பாதுகாப்புச் செயலாளரின் ஆலோசனையும் அதற்கு அவசியமாகும். அத்துடன், ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சர் கடமைகளை முன்னெடுப்பதற்கான நேரச்சிக்கல் இருப்பதால் முப்படைகள்ஒருங்கிணைந்து செயற்படும் செயற்பாடுகளை முன்னெடுப் பார்.
கேள்வி: தற்போது இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் இராணுவச் சிப்பாய்கள் அங்குள்ள அரசியல்வாதிகளின் பெயர்களை பட்டியலிட்டுக்கொள்வதாக குற்றஞ்சாட்டப்படுகின்றதே?
பதில்: தேர்தல் காலத்தில் இராணவத்திற்கு எந்தக் கடமையும் இருக்காது. ஆனால், பொலிஸாருக்கு உதவி தேவைப்பட்டால் அதனைச் செய்ய முடியும். நாம் மக்களுடன் நெருக்கமானவர்கள் என்ற வகையில் வேட்பாளர்கள் தொடர்பில் தகவல் திரட்டுவதாக இராணுவத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நாம் மறுக்கின்றோம். ஆனால், வேட்பாளர்களாக களமிறங்குகின்ற சகலரினதும் தரவுகள் எம்மிடத்தில் இருக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். வடக்கில் மாற்றமில்லை. தெற்கிலும் கூட இதே நிலைதான். காரணம், சில வேளை வேட்பாளர் ஒருவரால் தமக்கு அச்சுறுத்தல் உள்ளதாக எவரேனும் குற்றஞ்சாட்டினால் அவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுப்பதற்கு தேர்தல் வேட்பாளர்கள் குறித்த தரவுகள் எமக்கு அவசியமாகும்.
கேள்வி: சாதாரண சட்டம் அழுலில் இருக்கும்போது இராணுவம் தகவல் திரட்டுவது சரியானதா?
பதில் : இராணுவத்தினர் என்கின்ற ஒரு குழு கூட தேர்தலில் ஈடுபடமுடியும் அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை கண்காணிக்கவேண்டிய அவசியம் எமக்கு உள்ளது.
கேள்வி: இலங்கை இராணுவம் மீது தற்போது சர்வதேச அளவில் யுத்தக்குற்ற விசாரணை முன்வைக்கப்படுகின்றது. யுத்தக்குற்றம் இடம்பெற்றது உண்மையாயின் யுத்தக்குற்றம் இழைத்தவர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுகொள்கின்றீர்களா?
பதில்: இராணுவத் தளபதியாக 30 வருடங்கள் எனக்கு இராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. இராணுவம் யுத்தக்குற்றம் இழைக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடாகும். கதிர்காமம் வழக்கு, குமாரசுவாமி வழக்கு, சரசாலி வழக்கு, மீசாலி வழக்கு என்ற பல வழக்கு விசாரணைகள் முடிவடைந்துள்ளன. அதன்போது இராணுவம் விசாரணைகளுக்கு முகங்கொடுத்துள்ளது. எனவே, இனியும் அவ்வாறுதான் செயற்படும். சிறந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் விசாரணைகளுக்குச் செல்ல நாங்கள் தயார் நிலையிலேயே இருக்கின்றோம். அதனைவிடுத்து தவறுகளை மறைக்கவேண்டிய அவசியம் எமக்கு இல்லை.
கேள்வி: நீங்கள் பதவியேற்றவுடன் உண்மையான வீரர்களையும் கொலைகாரர்களையும் வேறுபடுத்தி அறிவேன் என்று கூறினீர்கள். மறுமுனையில் யுத்தக்குற்றம் இடம்பெறவில்லை என்கின்றீர்கள். ஆனால், யுத்தக்குற்றம் இலங்கைக்கு எதிராக பலமாக உள்ளபோது உண்மையைக் கண்டறியவேண்டிய அவசியம் இல்லையா?
பதில்: நிச்சயமாக செய்துபார்க்கவேண்டும். இது தொடர்பில் இராணுவம் செய்த விசாரணைகளில் யுத்தக்குற்றம் இடம்பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது. இவ்வாறிருக்க, இனி ஏதேனும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அதற்கு முகங்கொடுக்க இராணுவம் தயாராகவுள்ளது. அந்த விசாரணைகள் நாட்டின் சட்ட கட்டமைப்புக்கமைவாக நாட்டின் தலைமைத்துவத்தினால் எடுக்கப்படும் தீர்மானத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும் ஜனாதிபதி வெளிநாட்டு விசாரணைகள் அவசியமில்லை எனக் கூறியுள்ளார். அது இராணுவத்திற்கும் இலகுவாக இருக்கும். காரணம், உள்நாட்டிலேயே விசாரணைகளுக்கு முகங்கொடுப்பது இலகுவானதாகும்.
கேள்வி: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடத்தில் எம்முடன் இணைந்துகொண்ட போது மார்ச் மாதத்தில் யுத்தக்குற்ற விசாரணைகள் குறித்து ஆராய்வோம் என்று கூறியிருந்தார். இதுகுறித்து ஐ.நாவின் அவதானம் இலங்கை மீது பலமாக இருக்கின்றபோது இராணுவத்திடம் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியமல்லவா?
பதில்: இராணுவம் முடிந்தவரையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. அதனால் இனிவரும் காலங்களில் உரிய தரப்புகள் விசாரணைகளை முன்னெடுத்தால் முகங்கொடுப்போம் என்ற நிலைப்பாட்டையே மீண்டும் கூறுகின்றேன்.
கேள்வி: பிரகீத் எக்னெலிகொட விவகாரத்தில் நீங்கள் வழக்கு விசாரணைகளுக்கு பங்களிப்பு செய்வதாக கூறிவிட்டு தற்போது வரையில் அவ்வாறான எந்தவொரு பங்களிப்பையும் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டப்படுகின்றது?
பதில்: இலங்கையில் வெளியாகும் ஒரு பத்திரிகை ஒன்று மாத்திரமே கூறியிருந்தது. நிச்சயமாக அது தொடர்பிலான விசாரணைகளுக்கு நாங்கள் பங்களிப்புச் செய்ய தயாராகவே உள்ளோம். நான் இராணுவத்திலிருந்து விலகிய பின்பே இந்த விடயம் இடம்பெற்றது. தற்போது அது தொடர்பிலான தகவல்கள் அடங்கிய கோப்புகள் மாயமாகியுள்ளன. இருப்பினும், சட்டரீதியான புலனாய்வு தகவல்களின் பிரகாரமான தகவல்களை நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்துள்ளோம்.
கேள்வி: இராணுவத்திலிருந்து பாய்ந்துசென்ற பலர் குற்றவாளிகளாக உள்ளதாகக் கூறப் படுகின்றது. அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
பதில்: அவர்கள் சமூகத்திற்கு இடையூறாக இருப்பதால் மன்னிப்பு கோரியுள்ளோம். நாம் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கியபோது 13 ஆயிரம் பேர் சரணடைந்து சட்டரீதியாகவே விலகிச் சென்றார்கள். அதன் பின்னர் சரணடையாத பலர் கைது செய்யப்பட்டார்கள். அதனால் மக்களும் இவ்வாறானவர்களால் இடையூறு ஏற்படும்போது பொலிஸாருக்கு அறிவிப்பார்களாயின் உதவியாக இருக்கும். எதிர்வரும் தேர்தல் காலத்தில் இவர்கள் தவறான செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் அது இராணுவத்திற்கே களங்கமாகும்.
கேள்வி: இலங்கை இராணுவம் இரகசிய முகாம் களை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது?
பதில்: அது குறித்து கடந்த காலங்களில் அதிகமாக கேட்கப்பட்டது. ஆனால், அவ்வாறான ஓர் இரகசிய முகாமை அமைத்து செயற்படுவதற்கான எந்த அவசியமும் இலங்கை இராணுவத்திற்கு இருக்கவில்லை.தமிழ் சிறைக்கைதிகளை வதைமுகாம்களில் வைத்து இராணுவத்தினர் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் உள்ளனவே? இது தொடர்பிலான பிரச்சினையை அமெரிக்காவிலிருந்து வந்த ஊடகவியலாளர் ஒருவரும் வினவியிருந்தார். அவரிடத்தில், ""நீங்கள் எப்போது இலங்கைக்கு வந்தீர்கள்'' என்று நான் கேட்டேன். அவர் தான் முன்தினம் வந்ததாக பதிலளித்தார். அப்போது, ""தயவுசெய்து இந்தக் கேள்வியை என்னிடத்தில் கேட்காதீர்கள்'' என்று கூறினேன். ஒருவாரமாக இந்த நாட்டில் இருந்து, இந்நாட்டிலுள்ள மில்லியன் கணக்கிலான தமிழ் மக்கள் எப்படி ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் எனப் பாருங்கள் என்று கூறினேன்.அவரிடத்தில் அதற்கு பதில் இருக்கவில்லை.
கேள்வி: எவ்வறாயினும் மேற்படி குற்றச்சாட்டுகள் குறித்து எந்த விசாரணையும் மேற்கொள்ளப் படவில்லையா?
பதில்: வதைமுகாம்கள் இலங்கையில் இருந்ததாகக் கூறினாலும் அது தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டால் விசாரணைகளை மேற்கொண்டு ஒரு நாடு என்ற வகையில் விசாரணையில் பெறப்பட்ட முடிவை பகிரங்கமாக அறிவிக்க இராணுவம் பின்நிற்காது. தவறு செய்தவர்களை கண்டறிந்து தண்டனை வழங்கவும் நாம் தயார்.
கேள்வி: விஹாரைகளில் இராணுவத்தினர் பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்களா?
பதில்: இராணுவம் என்ற வகையில் புத்தசாசன அமைச்சின் அனுமதியுடன் பாதுகாப்புக் கடமைகளுக்காக இலங்கையிலுள்ள நான்கு மதங்களையும் பிரதிபலிக்கும் மத ஸ்தலங்களில் சேவைக்கு அமர்த்தியுள்ளோம். இவ்வாறு ஆயிரத்திற்கும் குறைந்த தொகையிலானவர்கள் தற்போதும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கேள்வி: மக்கள் இருக்கின்றபோது இராணுவம் எதற்கு மத ஸ்தலங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்?
பதில்: அவ்வாறு இராணுவச் சிப்பாய்கள் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படாமல் இருப்பது சிறந்தது என்பதுதான் எனது நிலைப்பாடுமாகும். குறிப்பாக, வடக்கு, கிழக்கிலுள்ள பல மத ஸ்தலங்களை மக்கள் நடத்திச் செல்லமுடியாமல் இருக்கின்றது. எனவே, மனிதாபிமான முறையில் இராணுவம் அவர்களுக்கு உதவிகளை வழங்குகின்றது. நல்லூர், தலதா மாளிகை, மடு தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். ஆனால், இராணுவச் சிப்பாய்கள் அங்குநீண்ட காலம் இருப்பது தவறானது.
கேள்வி: நாட்டில் பெரும் யுத்தமொன்று இடம்பெற்று தற்போது நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. அவ்வாறிருக்கின்றபோது இந்தளவு நீண்ட காலப்பகுதி வடக்கு, கிழக்கின் நிலைமைகளை சீரமைப்பதற்கு அவசியப்படுகின்றதா?
பதில்: வடக்கின் பல பகுதிகள் நீண்ட காலத்தின் பின்பே மீட்கப்பட்டது. எனவே, அங்கு வாழும் மக்களுடன் நாட்டின் ஏனைய பகுதியிலுள்ள மக்களுக்கு அந்நியோன்யமான தொடர்புகள் ஏற்பட வேண்டும். அப்போதுதான் நிலைமைகள் முழுமையாக சீரமைக்கப்படும்.
கேள்வி: வடக்கு கிழக்கில் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பதில் இராணுவம் ஏன் தாமதப்படுத்துகின்றது?
பதில்: நாட்டினுள் தற்போது கேரள கஞ்சா அதிகளவில் கொண்டுவரப்படவுள்ளது. அவ்வாறான செயற்பாடுகளிலிருந்து பாதுகாப்பு பெறவேண்டிய காரணத்திற்காகவே இராணுவம் தொடர்ந்தும் வடக்கு, கிழக்கில் நீடித்துள்ளது. எவ்வாறாயினும் 2018 நடுப்பகுதியில் காணி விடுவிப்பு தொடர்பில் சரியாக தரவுகளைப் பெற்றுகொள்ள முடியும்.