புலிகளை அழித்துக் காப்பாற்றிய நாட்டில் உருவாகிறது தமிழ் ஈழம்
02 Jan,2018
புலிகளை அழித்துக் காப்பாற்றிய நாட்டில் தமிழ்ஈழம் இலகுவாக உருவாகி வருகின்றது. இதற்கு இடம்கொடுக்கும் அரசை வீழ்த்தும் எனது போராட்டக் குரல் பொது மக்கள் முன்னணியின் மாநாட்டில் இன்று ஒலிக்கும்.
சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியைப் பலப்படுத்துவதே எனது இலக்கு.
இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
சிறிலங்கா பொது மக்கள் முன்னணியின் மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று மாலை இடம்பெறவுள்ளது. மாநாடு தொடர்பில் மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாவது:
சிறிலங்கா பொது மக்கள் முன்னணியின் வெற்றிக்காகவே நான் செயற்பட்டு வருகின்றேன். தாமரை மொட்டே எமது சின்னம். சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கே இன்று எனது ஒளிப்படமும் பெயரும் தேவைப்பட்டுள்ளது.
பொது மக்கள் முன்னணியின் மாநாட்டில் நாம் எமது வேலைத் ◌திட்டத்தை தெரிவிப்போம். இன்று இடம்பெறும் பொது மக்கள் முன்னணியின் மாநாட்டில் மிகப்பெரிய போராட்டத்தின் முதல்கட்ட நகர்வுகள் ஆரம்பிக்கப்படும்.
கூட்டு அரசு கடந்த காலங்களில் நடந்துகொண்ட விதத்தின் மூலமாக நாம் யார் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். பொது வாக்கெடுப்புக்கு ஒப்பாக இந்தத் தேர்தலை கருதி மக்கள் வாக்களிக்க வேண்டும்.
நாட்டினைப் பிரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கூட்டாட்சிக்கு அப்பால் சென்று ஓர் அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்து வருகின்றது. அரசமைப்பின் ஊடாக அதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்ஈழத்துக்கான பயணம் உருவாகி வருகின்றது. நாட்டில் தமிழ்ஈழம் உருவாக்கப்பட்டால் நாம் போராடியது வீணாகும்.
நீண்டகாலப் போரின் பின்னர் இலகுவாக ஒரு தமிழ்ஈழம் உருவாகின்றது என்றால் நாம் அதற்காகப் போராடியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. அரசு மிகவும் மோசமான வகையில் செயற்பட்டு வருகின்றது.
தேர்தல் வெற்றி எம் பக்கம் உள்ளது. சகல தரப்பையும் வீழ்த்தி உள்ளூராட்சி மன்றங்களில் எமது அதிகாரங்களை உருவாக்குவோம். அதற்கான முதல்கட்ட பயணம் இன்று ஆரம்பமாகின்றது – என்றார்.