ஒரேயொரு வைத்தியசாலை மட்டுமே இராணுவக் கட்டுப்பாட்டில்!
18 Dec,2017
வடக்கு மாகாணத்தில் உள்ள 108 வைத்தியசாலைகளில், ஒரேயொரு வைத்தியசாலை மட்டுமே இலங்கை இராணுவத்தால் கையளிக்கப்படாது இன்னமும் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் அமைந்துள்ள மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம், மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மற்றும் மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களம் என்பன குறித்த அமைச்சால் நேரடியாக நிர்வகிக்கப்படு கின்றன.
வடக்கு மாகாண மக்களுக்கான சுகாதார சேவை வழங்கலானது நோய்ப் பராமரிப்பு மற்றும் நோய் வரும்முன் காப்பு ஆகிய இரண்டு முதன்மைத் துறைகளின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 108 வைத்தியசாலைகள், 5 மார்பு நோய்ச் சிகிச்சை நிலையங்கள், 5 பால் வினைத்தொற்று நோய்ச் சிகிச்சை நிலையங்கள், 30 சுகாதார மருத்துவ அதிகாரிகள் பணிமனைகள், 28 பாடசாலைப் பற்சிகிச்சை நிலையங்கள், 5 பிராந்திய மலேரியா தடை இயக்க பணிமனைகள் என்பவற்றின் மூலம் மாகாணத்தில் உள்ள மக்களுக்கு சேவை வழங்கப்படுகின்றது. காங்கேசன்துறை ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் மட்டுமே இன்றும் விடுவிக்கப்படாத நிலையில் உள்ளது.
வடக்கு மாகாணத்தில் போருக்குப் பின்னரான சுகாதாரத்துறை அபிவிருத்திக்கான தேவைப்பாடானது அதிகரித்தே காணப்படுகின்றது.
வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட ஆளணிகள் 7 ஆயிரத்து 275 காணப்படுகின்ற போதிலும் 6 ஆயிரத்து 500 உத்தியோகத்தர்களே கடமையாற்றி வருகின்றனர். 775 வெற்றிடங்கள் இன்னமும் நிரப்பப்படாதுள்ளன.
இவ்வாறான நிலையில் சுகாதாரத் துறையின் அபிவிருத்தியில் பல சவால்களை சந்திக்கவேண்டியுள்ளது. என்றுள்ளது.