யாழ் பண்ணையில் அமைகிறது அரசாங்கத்தின் பாரிய ஓய்வு விடுதி!
02 Dec,2017
யாழில் மக்களின் நலன்கருதி பாரிய அரச ஓய்வு விடுதியொன்று அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் வை.ஏ.ஜி.கே. குணதிலக தெரிவித்துள்ளார்.
குறித்த விடுதி யாழ்ப்பாணம்-காரைநகர் வீதியில் பண்ணை கடற்கரைப் பகுதியை அண்டி யாழ்.சிறைச்சாலைக்கு அருகில் அமைக்கப்பட்டு வருகின்றது.
குறித்த விடுதி 40 அறைகளைக் கொண்ட சகல நவீன வசதிகளுடன் மக்கள் பயன்படுத்தும் விதமாக அமையவுள்ளதோடு தற்போது முதற்கட்ட கட்டுமானங்கள் குறித்த கடற்கரை பகுதியில் மண் நிரப்பப்பட்டு 60 மில்லியன் ரூபாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் குறித்த ஓய்வு விடுதியின் கட்டுமானங்கள் 300 மில்லியன் ரூபாவில் மேற்கொள்ளப்பட்டு அழகிய இரண்டுமாடிக் கட்டடத்துடன் அமையவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பண்ணை சுற்றுலாக் கடற்கரையை அண்டி அமையவுள்ள இவ் ஓய்வு விடுதியால் மிகுந்த பயனை சுற்றுலா வாசிகள் பெறுவதோடு யாழ்.மாவட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கும் இவ் விடுதியானது பங்களிப்பை செய்யுமென எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
ஏற்கனவே மண்கும்பான் பகுதியில் அரசபொது ஓய்வுவிடுதி அமைக்கப்பட்டு செயப்பட்டுவரும் நிலையில் மக்களுக்கான அரச பொது விடுதி அமைக்கப்படுவது பாரிய நன்மைகளை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.