இலங்கையில் மக்கள் பிரதிநிதித்துவ சபைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பெண்களின் அரசியல் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பாலின வன்முறைகளுக்கு எதிராக " அவளைத் தேர்ந்தெடுப்போம், வன்முறையை ஒழிப்போம்" என்ற பணித் திட்டத்தை ஐ.நா மக்கள்தொகை நிதியத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில் மொத்த மக்கள்தொகையில் 52 சதவீதம் பெண்களாகவுள்ள போதிலும் நாடாளுமன்றத்தில் 5.3 சதவீதமும், மாகாண சபைகளில் 4 சதவீதமும், உள்ளூராட்சி சபைகளில் 1.9 சதவீதமும்தான் பெண்களின் பிரதிநிதித்துவம் காணப்படுகின்றது.
உள்ளூராட்சி சபைகள் தேர்தல் சட்டத்திலும், மாகாண சபைகள் தேர்தல் சட்டத்திலும் சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் காரணமாக சபைகளில் பெண்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும் இந்த வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளே அவர்களின் அரசியல் பங்களிப்பை தடுக்கும் முக்கிய காரணியாக இருப்பதாக இந்த பணித் திட்டத்தின் பிரதான ஏற்பாட்டாளரான இலங்கை பாலின அடிப்படையிலான வன்முறை எதிர்ப்பு அமைப்பு கூறுகின்றது.
லட்சினை
துன்புறுத்தல், பாலியல் லஞ்சம் , மிரட்டுதல் , உடல் ரீதியாக தாக்கப்படுதல் , எச்சரிக்கைகள், நிதி ரீதியான அழுத்தங்கள், எச்சரிக்கைகள், பண்பற்ற முறையிலான ஊடக தகவல்கள் மற்றும் சமூக வலைத் தளங்களில் சேறு பூசப்படுதல் போன்றவை இந்த அமைப்பினால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
மக்கள் பிரதிநிதித்துவ சபைகளில் "அவளைத் தேர்ந்தெடுப்போம், வன்முறையை ஒழிப்போம்" என்ற தலைப்பில் நாடு தழுவிய அளவில் முன்னெடுக்கப்படும் 16 நாட்கள் பணித் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வன்முறையற்ற தேர்தல் சூழலை உருவாக்குவதற்கான விழிப்புபுணர்வு செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த பணித் திட்டத்தின் கீழ் பொது மக்களிடமிருந்து உறுதி மொழியை பெறும் வகையில் கையொப்பங்களும் திரட்டப்படுகின்றன.
"நான் அரசியலில் பங்கு கொள்ளும் பெண்களின் உரிமையை மதித்து ஏற்றுக் கொள்கின்றேன்.
கையெழுத்து வேட்டை
பெண்கள் என்ற காரணத்திற்காக அவர்களை சிறுமைப்படுத்தும் விதமான வதந்திகள், எதிர்மறை பிரசார உத்திகளான பதிவுகள் , காட்டூன்கள், மின்னஞ்சல்கள், பிரசுரங்கள் ஆகியவற்றை நான் பரப்ப மாட்டேன்.
என்னுடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மற்றும் உறவினர்களை அவர்களின் விருப்பத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு நான் வற்புறுத்தவோ, மிரட்டவோ மாட்டேன்.
நான் பெண்களின் அரசியல் உரிமைகளை மறுக்கும் விதமாக செயல்படுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் கட்சிகள், அரச ஊழியர்கள் மற்றும் பொது மக்களை வற்புறுத்துவேன்.
நான் ஜனநாயக செயல் முறையில் சமமான பங்காளர்களாக பெண்கள் அரசியலில் பங்குபற்றுவதை ஆதரிப்பேன்" என அந்த உறுதிமொழியில் கூறப்பட்டுள்ளது.