ஆகாரமின்றி தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விமான நிலையத்தில் தங்கியிருந்த வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாய்லாந்தின் பேங்கொங் நகரிலிருந்து தொழிநுட்ப பணிக்காக கட்டார் செல்வதற்கு விமானம் ஏறிய குறித்த பிலிப்பைன்ஸ் நாட்டு பயணி விமான மாற்றத்திற்காக இலங்கையில் இறங்கியுள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய அவர் கடந்த 14 ஆம் திகதி கட்டார் செல்வதற்காக இலங்கை விமான சேவை நிறுவனம் ஒன்றின் விமானத்திற்கு செல்ல ஆயத்தமாகியுள்ளார்.
எனினும் விமானத்தின் ஆசனங்கள் அனைத்தும் பயணிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் அவருகான ஆசனம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பயணி விமான நிலையத்தில் எவரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், உண்ண உணவுமின்றி காணப்பட்டுள்ளார்.
பயணி ஒருவர் விமான மாற்றத்திற்காக பிரிதொரு நாட்டில் இறங்கும் போது அவருக்கு விமானத்தில் பயணிக்க ஆசனமின்றி காணப்படுமாயின் அதனை தொடர்ந்து அடுத்ததாக பயணிக்கவுள்ள விமானத்தில் ஆசனம் பெற்றுக்கொடுக்கப்படுதல் அவசிமாகும்.
அது மாத்திரமின்றி பயணியானவர் விமான நிலையத்தில் ஓய்வெடுப்பதற்கான வசதி, உணவு வசதி, தொலைத்தொடர்பு வசதி உள்ளிட்ட பல சேவைகளை அவருக்கு வழங்குதல் என்பன ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்ட விமான சேவை நிறுவனத்தின் பொறுப்பாகும்.
ஆனால் குறித்த பயணிக்கு இலங்கையில் இயங்க கூடிய சர்வதேச விமான சேவை நிறுவனம் எந்தவித வசதிகளையும் செய்துக்கொடுக்காததோடு, அவரை பற்றிய தகவல்களை ஆராய்ந்து பார்ப்பதற்கும் முயற்சிக்கவில்லை.
இதனாலேயே அவர் மூன்று நாட்களாக விமான நிலையத்தில் தொடர்புகளற்ற நிலையில், ஆகாரமின்றி காணப்பட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டு பயணியின் தகவல்கள் எதுவுமின்றி அவர்களது உறவினர்கள் தேடிய நிலையில், அவரின் சகோதரி ஒருவர் கட்டாரிலிருந்து இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்றைய தினம் வருகை தந்துள்ளார்.
விமான நிலையத்திற்கு வருகை தந்த குறித்த பயணியின் சகோதரி குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் பயணி, விமான நிலையத்தில் தேக ஆரோக்கியமின்றி உறங்கிக்கொண்டிருந்த நிலையில், இனங்காணப்பட்டுள்ளார்.