யாழில் பொலிஸார் மீது வாள் வெட்டு!
17 Nov,2017
யாழ். கோப்பாய் பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் தப்பி ஓடியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த வாள் வெட்டுச் சம்பவத்தில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் விக்டர் நிசா எனப்படும் நிசாந்தன் என்பவரே தப்பி ஓடியுள்ளார்.
இவரை இன்று காலை மல்லாகம் நீதிமன்றுக்கு அழைத்துச்சென்ற சந்தர்ப்பத்திலேயே தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபருக்கு பிணை வழங்கப்பட்ட போதும், அவரை பிணையில் எடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை.
இந்த நிலையில் இவருக்கு எதிரான வழக்கு இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதற்காக விக்டர் நிசாவை அழைத்துச் சென்ற போதே அவர் தப்பி ஓடியுள்ளார் என்றும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் 30ஆம் திகதி யாழ்.கோப்பாய் பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இதில் பொலிஸ் கான்ஸ்டபில் ஆர்.எம்.டீ.ரத்நாயக்க மற்றும் பொலிஸ் கான்ஸ்டபில் கே.ஏ.ஐ.சுரேந்திர என்போரே படுகாயமடைந்திருந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலில் பிரதான சந்தேகநபரான விக்டர் நிசா உள்ளிட்ட மூவர் கொழும்பில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.