( அன்டனி.R)
இந்த நாட்டின் ஜனாதிபதியாக நான் இருக் கும் வரையில் எந்தவொரு இராணுவ வீரரையும் வெளிநாட்டு நீதிபதிகள் முன் நிறுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்பதை மிகவும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்ற இராணுவ வீரர்களுடனான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றுகையில்; நீங்கள் அனைவரும் பாரிய அர்ப்பணிப்புடன் இந்த நாட்டைப் பாதுகாப்பதற்காக முன்வந்தவர்கள். தேசிய அனர்த்தம் ஒன்று இடம்பெற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் உயிர்களை துச்சமென மதித்து செயற்படுகின்ற உங்களுக்கு நாங்கள் அனைவரும் கடன்பட்டவர்கள்.
இந்த தேசத்திற்காக முன்னிற்கின்ற நீங்கள் தேசிய அனர்த்தங்களான மண்சரிவு, தொற்றுநோய் அபாயம் போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் செயற்படுகின்ற விதம் எமக்குத் தெரியும். அமைதியான சமூகம் என்ற வகையில் சமாதானம், நல்லிணக்கம், மற்றும் ஒற்றுமை, புரிந்துணர்வுடன் ஒரு பாரிய பயணமொன்றை இந்தநாடு சென்றுகொண்டிருக்கின்ற நிலையில் உங்களின் ஒத்துழைப்பு அதற்கு மிகவும் அதிகமாகவே அவசியமாகின்றது.
இந்தநாட்டின் தலைவராக நான் இருக்கும் வரை உங்களில் ஒருவரையும் எந்தவொரு யுத்தக்குற்ற விசாரணை நீதிமன்றத்திற்கும் அனுப்ப மாட்டேன் என்பதை வாக்குறுதியாக அளிக்கின்றேன். யாராவது தவறுகள் செய்திருந்தால் நாட்டில் தற்போது காணப்படுகின்ற சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.
சில எதிர்பார்ப்பு இல்லாத அரசியல்வாதிகள் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் இராணுவ வீரர்களை யுத்தநீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனைப் பெற்றுக்கொடுக்க நாங்கள் முயற்சிப்பாக கூறிவருகின்றனர். ஆனால் இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் அவ்வாறு எதுவும் இடம்பெறுவதற்கு, அனுமதிக்கமாட்டேன். எந்தவொரு இராணுவ வீரரையும் வெளிநாட்டு நீதிபதிகள் முன்னால் விசாரணைக்கு உட்படுத்த இடமளிக்க மாட்டேன் என்பதை மிகவும் தெளிவாக குறிப்பிடுகின்றேன்.
இவ்வாறான அடிப்படையற்ற விடயங்களைக் கூறி உங்களை ஏமாற்றுவதற்கு சிலர் முயற்சிக்கலாம் என்பதை நான் உங்களுக்கு கூறிவைக்கின்றேன்.
உலகின் எந்தவொரு மனிதாபிமான உரிமைகள் தொடர்பான எந்தவிதமான அமைப்பிற்கும் இலங்கை இராணுவ வீரர்கள் மீது அழுத்தம் பிரயோகிப்பதற்கு நான் இடமளிக்கமாட்டேன். இறைமை உள்ள நாடு என்றவகையில் எந்தவிதமான தலையீடுமின்றி எமது பிரச்சினையை தீர்த்துக்கொள்ள எம்மால் முடியும் என்பதை ஐக்கியநாடுகளுக்கு நான் அறிவுறுத்தியிருக்கின்றேன். ஒருசில வதந்திகளை வெளியிடுகின்றவர்களுக்கு ஏமாறவேண்டாம். என்னை நம்புமாறு உங்களை கோருகின்றேன்.
அனர்த்த நேரங்களின் போது நீங்கள் அனைவரும் செய்கின்ற விசேடமான அந்த சேவையை நான் பாராட்டுகின்றேன். ஒருநாடு என்றவகையில் சமாதானம், மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக உங்களின் ஒத்துழைப்பை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கின்றேன். எந்தவொரு இராணுவ வீரரும் வெளிநாட்டு சுற்றுலா செல்வதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்பதை நான் மிகவும் திட்டவட்டமாக வலியுறுத்திக்கூற விரும்புகின்றேன்.
அனைவரும் பல்வேறு கடினங்களுக்கு மத்தியில் பெற்றுக்கொண்ட இந்த சமாதானம் சௌபாக்கியம் என்பவற்றை தொடர்ந்தும் வைத்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். தற்போது காணப்படுகின்ற ஆரோக்கியமான நிலைமையை மேலும் முன்கொண்டுசெல்ல வேண்டும். அதற்கு அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்.
இலங்கை இராணுவத்தை எதிர்காலத்தில் உலகின் சிறந்த விசேடமான இராணுவங்களில் ஒன்றாக உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். யுத்தத்தின்போது தோற்கடிக்கப்பட்ட புலிகள் வெளிநாடுகளில் நிதி சேகரிப்பதை இன்றும் முன்னெடுக்கின்றனர். பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு கூட்டங்களை ஏற்பாடு செய்து வெற்றியடையாத முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை மேலும் வெற்றிபெறாதவர்களாக ஆக்குவதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். அவர்களின் கருத்தியலைத் தோற்கடிக்கவேண்டும். அந்தக்கருத்தியலை எமது பூமியிலிருந்து அகற்றிவிடவேண்டும். அவர்களின் மனதிலிருந்தும் அவற்றை நீக்கிவிடவேண்டும்.
அந்த கருத்தியலை அகற்றுவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். நாங்கள் இராணுவத்தை குறைத்து மதிப்பிடுவதாகவும், இராணுவத்தின் வளங்களை குறைப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். நாங்கள் இராணுவத்தை வேட்டையாடுவதாக கூறுகின்றனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஊடாக இராணுவத்தினரை காட்டிக்கொடுத்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். இவ்வாறு கூறுகின்றவர்களில் அரசியல்வாதிகள் ஊடகவியலாளர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை 2015 ஆம் ஆண்டு முன்வைத்த யோசனை அதற்கு முன்னர் முன்வைத்த யோசனை என்ன என்பதனை பார்க்கவேண்டும். முன்னைய ஆட்சிக்காலத்தில் ஐ.நா. என்ன கூறியது என்பதனை பார்க்கவேண்டும். குற்றச்சாட்டுக்கள் இருப்பின் இலங்கை அரசாங்கமே விசாரிக்கும் என்பதனை கூறியுள்ளோம். இப்போது சில நாடுகளுக்கு செல்வதற்கு எமது இராணுவத்துக்கு வீசா கிடைப்பதில்லை. நாங்கள் அந்த நிலையை மாற்றியமைக்கவேண்டும். அதற்காக நுட்பமாக செயற்படவேண்டும்