இனங்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டை துண்டுகளாகப் பிரிக்க முற்பட்டால் நாட்டில் மீண்டுமொரு பேரழிவு ஏற்படும் என உத்தேச அரசியல் யாப்பிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுவரும் முக்கிய பௌத்த பிக்குகளில் ஒருவரான ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பௌத்த பீடத்தின் பீடாதிபதியான பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் எச்சரித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை சிப்பிகுளம் பகுதியில் உள்ள முகம்மதியா இஸ்லாமிய அமைப்பினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார்.
நாட்டில் வாழும் அனைத்து இன மற்றும் மதங்களை மதித்து அவர்களுக்கான தனித்துவத்தை அங்கீகரித்து நடந்துகொள்வோமானால் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாது என குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கை இணைத்தால் மீண்டும் இரத்த ஆறு ஓடும்
அதேவேளை தேரவாத பௌத்தத்தை பின்பற்றும் தான் உட்பட ஸ்ரீலங்காவைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும் சாதி மற்றும் குல ரீதியாக பிரிந்துசெயற்படுவதாகவும் விமர்சித்த பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் வடக்கு கிழக்கு இணைப்பிற்கும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
எமது நாட்டிற்கான சுதந்திரத்தை சிங்களத்தலைவர்கள் மாத்திரமன்றி தமிழ் தலைவர்கள், முஸ்லீம்கள் மற்றும் கத்தோலிக்கத் தலைவர்கள் அனைவரும் இணைந்து போராடியே வென்று கொடுத்தனர்.
இதன்போது வெள்ளைக்காரன் தனித்தனியோ ஆட்சிகளைப் பிரித்துக்கொடுக்க கதைத்த போது சுதந்திரத்திற்காக போராடிய எமது தலைவர்கள் அதனை நிராகரித்ததுடன் தங்களிடமிருந்து பறித்த போது நாடு எவ்வாறு இருந்ததே அதே போல் ஒரு நாட்டை திருப்பிக்கொடுக்குமாறு கேட்டனர்.
ஆனால் ஒருபோதும் நாட்டைத் துண்டாடித் தருமாறு எந்தவொரு தலைவர்களும் வெள்ளையனிடம் கேட்கவில்லை.
அதற்கமையத்தான் ஒரே நாடாக எமக்கு சுதந்திரம் கிடைத்தது. அப்போது அநுராதபுரத்திற்கும் கடல் இருந்தது. இந்தத் தகவல் உங்களுக்குத் தெரியுமோ தெரியாது.
ஆனால் இன்று வடக்கு கிழக்கை இணைத்து நாட்டை பிரிக்க கேட்கின்றனர். இதற்கமைய அநுராதபுரம் அரச மரத்தடி வரை அவர்கள் தமிழீழத்தை பிரித்துத் தருமாறு கோருகின்றனர்.
நாட்டை பல துண்டுகளாகப் பிரித்து ஒருபோதும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அதனால் இன விகிதாசார அடிப்படையில் நாட்டைத் துண்டாடி நாட்டில் நல்லிணக்கத்தையோ நிரந்தர அமைதியையோ ஏற்படுத்த முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்தால் மனித சடலக் குவியல்களையே நாம் மீண்டும் காண நேரிடும். தற்போது நுவரெலியா – மஸ்கெலியா பிரதேசம் இன விகிதாசார அடிப்படையில் பல துண்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஸ்ரீபாத புனித ஸ்தலம் அமைந்துள்ள பகுதியும் இனமொன்றை அடிப்படையாகக் கொண்டு தனிப் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது.
இது மகா தவறு. ஒருபோதும் இந்த நாட்டை இன அடிப்படையில் பிரிக்கக் கூடாது.
அனைத்துஇனங்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய வகையிலேயே நாட்டை நிர்வகிக்க வேண்டும் என்றார்