புதிய அரசியல் யாப்பினை உருவாக்கி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சி இடம்பெற்று வரும் வேளையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து தற்போது அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது. புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது ஆட்சிக்காலத்தின் போது இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண தான் முயன்றதாகவும் ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அதற்கான ஒத்துழைப்பினை வழங்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண பல தடவைகள் நாங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேசியிருந்தோம். ஆனால் எமக்கு ஒத்துழைப்பு வழங்க கூட்டமைப்பின் தலைமை முன்வரவில்லை. இவ்வாறு ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் தீர்வை கண்டிருக்க முடியும் என்றும் கூறியிருந்தார்.
இதேபோன்றே கடந்த சில தினங்களுக்கு முன்னர் எம்பிலிப்பிட்டியவில் உரையாற்றியிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ யுத்தத்தை நிறைவுசெய்த பின்னர் நாட்டிலுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு நான் ஆவலாக இருந்தேன். அதுகுறித்து சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான தீர்வை முன்வைப்பதற்கு எதிர்பார்த்திருந்தேன். அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி உட்பட எதிர்க்கட்சியிலுள்ள ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தேன். எனினும் அக்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதனைவிட என்னிடம் கிடைக்கும் எந்தவொரு தீர்வையும் ஏற்றுக்கொள்ளவேண்டாம் என சர்வதேசமும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் கேட்டுக்கொண்டிருந்தன. அதனாலேயே எனது அழைப்பை கூட்டமைப்பினர் ஏற்கவில்லை. மேலும் என்னைத் தேர்தலில் தோற்கடிப்பதே சர்வதேசத்தினதும், புலம் பெயர் அமைப்புக்களினதும் திட்டமாக இருந்தது. அதனாலேயே என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள இவர்கள் முன்வரவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.
தனது ஆட்சிக்காலத்தின்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் அரசியல் தீர்வினை எப்போதோ கண்டிருக்க முடியும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் மஹிந்த ராஜபக் ஷ கூறியிருந்தார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு நல்கிவரும் ஆதரவைப் போன்று தனது அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் அவர் கவலையும் வெளியிட்டிருந்தார். இதன் ஒரு கட்டமாகவே அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தின் போதும் மஹிந்த ராஜபக் ஷ இதனை சுட்டிக்காட்டியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்தும் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உடைமைகள், அழிக்கப்பட்டுமே யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. யுத்தத்தில் இடம்பெயர்ந்த 3 இலட்சம் மக்கள் வரை சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்திருந்தனர்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து இலங்கைக்கு ஐ.நா.வின் அப்போதைய செயலாளர் பான் கீ மூன் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டிருந்தார். இதன்போது அரசாங்கமானது பொறுப்புக்கூறும் செயற்பாட்டில் அக்கறைகாட்டும் என்றும் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதிமொழி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் வழங்கப்பட்டிருந்தது. இதேபோன்றே யுத்தம் முடிவடைந்ததையடுத்து இந்தியாவிற்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, இந்தியாவின் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இந்தப் பேச்சுவார்த்தையையடுத்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று பிரச்சினைக்கு தீர்வுகாண தயார் என்றும் அறிவித்திருந்தார். இவ்வாறு அறிவிக்கப்பட்டபோதிலும் அரசியல் தீர்வைக் காண்பதற்காக இதய சுத்தியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
2011 ஆம் ஆண்டு ஜனவரிமாதம் முதல் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பினருடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்குமிடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 16 சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றதையடுத்து அரசாங்கமானது பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக்கொண்டது.
அடுத்த சுற்றுப் பேச்சுக்காக திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டமைப்பின் குழுவினர் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் பேச்சுவார்த்தைக்காக காத்திருந்தபோதும் அந்தப் பேச்சுவார்த்தையில் அரசாங்கத் தரப்பினர் பங்கேற்கவில்லை. இதனையடுத்து இருதரப்பினருக்குமிடையிலான பேச்சுக்கள் முறிவடைந்தன.
இதனையடுத்து தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் அரசாங்கம் நேரடியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியே கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது என்றும் அரசாங்கத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டு தனியொரு கட்சியே பேச்சுநடத்தியதாக அரசாங்கம் அறிவித்த விடயமானது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றினை அமைத்த அன்றைய அரசாங்கமானது தமிழ் தேசியக்கூட்டமைப்பானது பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தால் மட்டுமே பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க முடியும் என்று அறிவித்தது. ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனோ, அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அந்தப் பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்படுமானால் அதன் பின்னர் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என்று அறிவித்திருந்தார்.
இருதரப்பினரும் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தமையினால் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை பின்னர் இடம்பெற்றிருக்கவில்லை. இதன்பின்னர் அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையில் சர்வ கட்சிக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவும் நூற்றுக்கும் மேற்பட்ட தடவைகள் ஒன்றுகூடி அறிக்கையொன்றினை முன்வைத்திருந்தது. இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத நிலையில் குப்பைக்குள் போடப்பட்டிருந்தது.
இதன் பின்னர் அரசியல் தீர்வுக்கான எத்தகைய முயற்சிகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. அன்றைய அரசாங்கமானது நினைத்திருந்தால் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையினை நடத்தி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை கண்டிருக்க முடியும். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பானது தீர்வுத்திட்ட வரைபு ஒன்றையும் அரசாங்க குழுவிடம் சமர்ப்பித்திருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது சிறைச்சாலைகள், மற்றும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது பெயர் விபரங்களை வெளியிடுவது என்றும் இணக்கப்பாடு காணப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் கூட ஒழுங்கான முறையில் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
அரசாங்கத்துடன் நேரடியான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பானது அன்று தயாராக இருந்தது. 2011 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் இருதரப்பிற்குமிடையில் பேச்சுக்கள் நடைபெற்றிருந்தன. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை தனித்து சந்தித்தும் இந்த விடயங்கள் தொடர்பில் ஆலோசனை நடத்தியிருந்தார்.
இவ்வாறு அன்றைய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வைக் காண கூட்டமைப்பு தயாராக இருந்தது. அதற்கான ஒத்துழைப்புக்களையும் வழங்கி வந்தது. ஆனால் அன்று கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறிய அன்றைய அரசாங்கத் தரப்பினர் இன்று தமக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும் என்று கூறுவது எந்தளவிற்கு ஏற்றுக்கொள்ளத்தக்க கூற்று என்பது குறித்து சிந்திக்கவேண்டியுள்ளது.
கடந்த அரசாங்க காலத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தரப்பினர் தற்போது இடம்பெற்று வரும் அரசியல் தீர்வுக்கான முயற்சிக்காவது ஆதரவினை வழங்கவேண்டும். இதுவே இன்றைய அவசிய தேவையாக உள்ளது.