மாத்தளை – லக்கல – தெல்கமுவ ஓயாவில் குளிக்கச் சென்று காணாமல் போன 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மாத்தளை – தெல்கமுவ ஓயாவில் நேற்று (4)4 பிற்பகலில் குளித்துக் கொண்டிருந்த 08 பேர், நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். முன்னதாக 10 பேர் அடித்துச் செல்லப்பட்டதாக தெரியவந்தது. எனினும், தற்போது 8 பேரே அடித்துச் செல்லப்பட்டதாக பொலிசார் கூறுகின்றனர்.
புத்தளம் மாவட்டத்தின், நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்த 12 பேர், சுற்றுலா சென்றிருந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை, பொலிஸார், பிரதேச மக்கள, தம்புள்ளை உயிர் பாதுகாப்புப் பிரிவினர் ஆகியோர் இணைந்து நேற்று முதல் தேடி வந்தனர்.
நேற்று மாலை வரை 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
நாத்தாண்டியா பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய கிங்ஸ்லி ரத்னாயக்க, அவரது மனைவியின் தாயாகிய 59 வயதுடைய சந்ரா காந்தி, 38 வயதுடைய ரவிந்ர லசந்த உடவரகே, அவரது மனைவியான 38 வயதுடைய ருவணி தில்ருக்ஸி, அவர்களது மகளான 12 வயதுடைய வினிசா உடவரகே ஆகியோரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டிருந்தன.
அதனையடுத்து, விசேட அதிரடிப்படை, கடற்படையின் சுழியோடி பிரிவினர் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.
நீரில் அடித்துச்செல்லபட்ட சிறுமியின் சடலம், சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 4 கிலோமீற்றர் தூரத்தில் வைத்து இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. ஹிருணி தின்ஹாரா என்ற 4 வயது சிறுமியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்ந்து தேடப்பட்டு வந்த 12 வயதுடைய மந்தினா ரத்னாயக்க இன்று பிற்பகல் மீட்கப்பட்டதுடன் இவர் உயிரிழந்த கிங்ஸ்லி ரத்னாயக்கவின் மகளாவார் எனத் தெரியவருகிறது.
உயிரிழந்த லசந்த உடவரகேவின் மற்றுமொரு மகளான 7 வயதுடைய விமாசி உடவரகேவின் சடலம் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டது