தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் உளவுத்துறை பொறுப்பதிகாரியாக இருந்த பொலிஸ் பரிசோதகர் சுனில் தாப்றுவை, பொலிஸ் உத்தியோகபூர்வ குடியிருப்புக்குள் நுழைந்து சுட்டுக் கொலை செய்த குற்றத்துக்காக முன்னாள் புலிகள் அமைப்பின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த மதன் எனப்படும் செல்லதுறை கிருபாகரனுக்கு எதிராகவே இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன் றின் நீதிபதி பியசேன ரணசிங்க இந்த தீர்ப்பை நேற்று அறிவித்தார்.
2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற இந்த கொலை தொடர்பில் 14 வருடங்களின் பின்னர் நேற்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
55 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டு சட்டமா அதிபரால் தொடரப்பட்டிருந்த 4 குற்றச்சாட்டுக்களில் மூன்று தொடர்பில் பிரதிவாதியை குற்றவாளியாக கருதியே நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை அளித்தது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தொட ரப்பட்டிருந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அது தொடர்பில் ஆயுள் தண்டனையும் துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரதிவாதிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த இரு குற்றச்சாட்டுக்களில் ஒன்றுக்கு 5 வருட கடூழிய சிறைத் தண்டனையும் மற்றைய குற்றச்சாட்டுக்கு 25 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது.
தெஹிவளை புலனாய்வு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தாப்றுவின் ஒற்றராக குற்றவாளி செயற்பட்டதாக வும், தகவல் வழங்குவதைப் போன்று, பொலிஸ் விடுதிக்குள் சென்று உறக்கத்தில் இருந்த பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றதாகவும் முறைப்பாட்டாளர் தர ப்பில் மன்றில் வாதங்கள் முன்வைக்கப்பட் டன.
சம்பவத்தையடுத்து தண்டனை சட்டக் கோவையின் 296 ஆவது அத்தியாயத்தின் கீழ் தெஹிவளை பொலிஸாரால் குற்றவாளி கைது செய்யப்பட்டு கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் பீ 6544 எனும் இலக்கத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் ஒரு வருடத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றவாளிக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இந்நிலையிலேயே பயங்கரவாத விவகாரங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட கொழும்பு விசேட நீதிமன்றில் அது தொடர்பில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன. விசாரணைகள் நிறைவடைந்து தீர்ப்புக்காக நேற்று குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதன்போது முதலாம் இரண்டாம் நான் காம் குற்றச்சாட்டுக்கள் வழக்குத் தொடுநர் சட்டமா அதிபரால் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி பியசேன ரணசிங்க அறிவித்தார்.
இதனையடுத்து தண்டனைக்கு முதல் மன்றில் கருத்துரை நிகழ்த்திய சிரேஷ்ட அரச சட்டவாதி நயனா செனவிரத்ன, நீதிமன்றம் குற்றவாளியாக கண்ட பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டு தொடர்பில் ஆயுள் தண்டனை வழங்க முடியும் என சுட்டிக்காட்டினார்.
இரண்டாவது குற்றச்சாட்டான கைத்துப்பாக்கியொன்றை வைத்திருந்தமை தொடர் பில் 5 முதல் 20 வருடங்கள் வரை கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட முடியும் எனவும் 4 ஆவது குற்றச்சாட்டான அனுமதிப்பத்திரமின்றி கைத்துப்பாக்கி வைத்திருந்தமை தொடர்பில் 25 ஆயிரம் ரூபா தண்டம் அல்லது 2 வருட சிறை அல்லது தண்டமும் விதிக்க முடியும் என சுட்டிக்காட்டி குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க கோரினார்.
எனினும் குற்றவாளி சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா, தனது சேவை பெறுநர் தகவல் வழங்கவே பொலிஸ் நிலையம் சென்றதாகவும், அவரது சகோதரன் புலி அமைப்பைச் சேர்ந்தவர் என்பதை மையப்படுத்தி அவர் இந்த கொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நாட்டுக்கு எதிரான தகவல் ஒன்றை தெரிந்து கொண்டு அந்த தகவலை கொடுக்காமல் இருந்தார்.
அல்லது மறைத்தால் 7 ஆண்டுகள் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றம் என்பதாலேயே தகவல் வழங்க தனது சேவை பெறுநர் சென்றதாக கூறினார்.
எவ்வாறாயினும், நீதிமன்றம் தனது சேவை பெறுநரை குற்றவாளியாக கண்டதன் பின்னர், அவர் இதுவரை 14 வருடங்களாக விளக்கமறியலில் இருந்து வரும் காலம் மற்றும் அவரது வயதான தாய் மற்றும் சகோதரர் ஆகியோரை கருத்திற்கொண்டு இலகு தண்டனை விதிக்குமாறும் அவர் கோரினார்.
இதனையடுத்து நீதிபதி தண்டனையை அறிவித்தார். முதல் குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, இரண்டாம் குற் றத்துக்கு 5 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்தார்.
நான்காம் குற்றத்துக்கு 25 ஆயிரம் ரூபா தண்டம் விதித்த நீதிபதி அதனை செலுத்தாது விடின் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என எச்சரித்ததுடன் குற்றவாளி விளக்கமறியலில் இருந்த காலத்தை கருத்திற் கொண்டு இந்த தண்டனை விதிக்கப்படுவதாக அறிவித்தார்.