பிரித்தானியா இலங்கை பெண்ணை ஏமாற்றிய இலங்கையர்!
02 Nov,2017
குறித்த பெண்ணிடம் தொலைக்காட்சி நாடகம் எடுப்பதாக கூறி 30 இலட்சம் ரூபாவை நபர் ஒருவர் மோசடி செய்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தொலைக்காட்சி நாடக இயக்குநர் எனக் கூறப்படும் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், அவருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்து நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றின் பிரதம நீதிவான் ருச்சிர வெலிவத்த உத்தரவிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையரான சென்ட்றா ஹபு ஆரச்சி என்ற பெண், இதற்கு முன்னர் இலங்கைக்கு வந்து தொலைக்காட்சி நாடகங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் தன்னை இயக்குநராக அடையாளப்படுத்திக்கொண்ட குறித்த நபர் நாடகமொன்றை எடுக்கவுள்ளதாக தெரிவித்து குறித்த பெண்ணிடமிருந்து 30 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த பணத்தை திருப்பிக்கேட்ட போது அந்த நபர் 30 இலட்சம் ரூபாவுக்கான காசோலை ஒன்றை வழங்கியதாகவும், அந்த காசோலையை மாற்றுவதற்கு முயற்சித்தபோது, வங்கி கணக்கில் பணம் இல்லாத காரணத்தினால் காசோலை மறுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதையடுத்து குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், குறித்த வழக்கு நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேகநபருக்கு கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கிய நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது