இலங்கை : துணை அமைச்சர் விஜயசேகர பதவி நீக்கம்
29 Oct,2017
இலங்கையில் மற்றுமொரு துணை அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார துணை அமைச்சரான துலிப் விஜயசேகர பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவரது பதவி நீக்கம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.
கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்வாகியிருந்தார்.
துணை அமைச்சர் பதவி வகித்த இவர், அண்மைக்காலமாக அரசாங்கத்தை விமர்சித்தும் கூட்டு எதிரணிக்கு சாதகமான முறையிலும் கருத்துக்களை வெளியிட்டு வந்ததாக கூறப்படுகின்றது.
கடந்த செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி சுற்றுலா துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகார துணை அமைச்சராக பதவி வகித்த அருந்திக்க பெர்னான்டோ அமைச்சர் பதவியிலிருந்து ஜனாதிபதியினால் நீக்கப்பட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.