இலங்கை கடற்படைக்கு புதிய தளபதி நியமனம்
26 Oct,2017
இலங்கையின் புதிய கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ். ரணசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளை வியாழக்கிழமை தொடக்கம் முதல் இவரது நியமனம் நடைமுறைக்கு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
புதிய கடற்படை தளபதியாக நியமனம் பெற்றுள்ள எஸ்.எஸ். ரணசிங்க வைஸ் அட்மிரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இவர் தனது நியமன கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் ஓஸ்ரின் ஃபெர்ணான்டோவிடமிருந்து இன்று புதன்கிழமை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது கடற்படையின் பிரதான அதிகாரியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ். ரணசிங்க பணியாற்றி வருகின்றார்.
ஏற்கனவே கடற்படை 21வது தளபதியாக பதவி வகித்த துணை அட்மிரல் ட்ரவிஸ் ஜெரோமி சின்னையா தனது சேவையிலிருந்து ஓய்வு பெறுவதையடுத்தே புதிய கடற்படை தளபதியாக எஸ்.எஸ். ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழரான சின்னையா இலங்கையின் 37வது கடற்படைத் தளபதியாக கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதிதான் நியமிக்கப்பட்டார்.
கடந்த மாதம் 26ஆம் தேதியுடன் 55வது வயதில் அவர் ஓய்வு பெற வேண்டியிருந்த போதிலும், ஜனாதிபதியினால் ஒரு மாத காலம் சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.