இலங்கை: ஜனவரி மாதம் உள்ளூராட்சி தேர்தல் நடத்த முடிவு
26 Oct,2017
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தள்ளிப் போடப்பட்டு வந்த இலங்கையின் உள்ளூராட்ச்சி சபைகளின் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 27 தேதி நடைபெற அவகாசம் இருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்தப்பட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்குப் பின்னர் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் கணேசன் கொழும்பில் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இதன்படி அடுத்த ஜனவரி மாதம் உள்ளுராட்சி சபை தேர்தல்களை நடத்துவதற்கான அரச வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வாரம் வெளியிடவுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தப்பா இன்று மாலை கொழும்பில் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபை திருத்தச் சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் அந்த சபைகளுக்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கைகள் உள்ளடக்கப்பட்ட அரச வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடப்படாததன் காரணமாக சம்பந்தப்பட்ட தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே தேர்தல் தோல்வியை தவிர்ப்பதற்காக அரசாங்கம் இவ்வாறு அரச வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதை வேண்டுமென்றே தாமதித்து வருவதாக கூட்டு எதிர் கட்சியினர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தனர்.
இந்த பின்னணியில் அமைச்சர் பைசர் முஸ்தப்பா இந்த அறிவித்தலை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது