வீடமைப்புத் திட்டத்தில் அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
26 Oct,2017
யாழ். மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் வீடமைப்புத் திட்டத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து மீள்குடியேறிய முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 8 மணி முதல் 10 மணிவரை யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்றது.வீட்டுத்திட்டத்தில் தமக்கு பல்வேறு காரணங்களை காட்டி இறுக்கமான நிபந்தனைகளை அரச இயந்திரங்கள் மேற்கொள்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளார்.
மீள்குடியேற்ற செயலணியின் மூலம் 200 வீடுகள் முஸ்லிம் மக்களுக்காக 2016 டிசம்பர் மாதத்தில் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்ட நிலையில் இன்றுவரை அதில் ஒரு வீட்டையாவது குறித்த மக்களுக்கு வழங்கவில்லை எனவும், 2017ஆம் வருடம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கின்ற நிலையில் 20க்கும் குறைவானவர்களுக்கே வீடுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தங்களுக்கு வழங்கப்பட்ட 200 வீடுகளும் முழுமையாக வழங்கப்படல் வேண்டும், இந்தக் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி சமாதானமான முறையில் உயர் அதிகாரிகளுடன் பேசினோம் ஆனால் எந்தப் பலனும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே எமது நிலையை உலகிற்கு எடுத்துச் சொல்வதற்கு இந்த அமைதியான அடையாள சத்தியாக்கிரகப் போராட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.