நீதிமன்றுக்கு ஆட்டம் காட்டும் கொமடோர் தசநாயக்க
21 Oct,2017
2008/09 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை சம்பந்தமான வழக்கில் கைது செய்யப்பட்ட, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர், கொமடோர் டிகேபி தசநாயக்கவை நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாதது ஏன் என்று சிறைச்சாலை அதிகாரிகளிடம் நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.
இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு, நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் முக்கிய சந்தேக நபராக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொமடோர் தசநாயக்க நேற்றைய வழக்கு விசாரணைகளின் போது, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
இதையடுத்து, கொமடோர் தசநாயக்கவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமைக்கான காரணம் என்ன என்று விளக்க அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு, நீதிவான் லங்கா ஜெயரத்ன, உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், கொமடோர் தசநாயக்கவை சிறைச்சாலை மருத்துமைனையில் அனுமதிக்காமல் இன்னமும் வெலிசறையில் உள்ள கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது ஏன் என்றும் விளக்கமளிக்குமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்,முன்னாள் கடற்படைப் பேச்சாளர் தொடர்பாக சரியான தகவல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்குமாறும், சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு நீதிவான் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய இன்னமும் தலைமறைவாக இருக்கும் லெப்.கொமாண்டர் பிரசாத் ஹெற்றியாராச்சியை கைது செய்வதற்கான பகிரங்க பிடியாணையை பிறப்பித்த நீதிவான், கொமடோர் தசநாயக்க உள்ளிட்ட ஏழு சந்தேக நபர்களையும் நொவம்பர் 1ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
2008/09 காலப்பகுதியில் அனைத்துலகப் பாடசாலை மாணவர்கள் 6 பேரும், பல்கலைக்கழக மாணவர்கள் 5 பேரும் சிறிலங்கா கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.