நல்லாட்சி அரசில் உண்மைகளை வெளிப்படுத்துகிறவர்கள் நாட்டில் இருக்க முடியாத நிலை
20 Oct,2017
மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பில் உண்மைகளை வெளியிட்டவர்கள் கூட, நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நாட்டில் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் சாட்சி வழங்கிய அனிகா விஜேசூரிய அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக வெளியான தகவல் தொடர்பிலேயே ஜி.எல்.பீரிஸ் தமது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் ஏற்கனவே தனிநாடு உருவாக்கப்பட்டு விட்டதாக குறிப்பிட்டுள்ளார். வடக்கு,கிழக்கில் தனிநாடு என்ற கருத்து கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு தனிநாடு உருவாக்கப்பட்டு விட்டதாக பீரிஸ் கூறியுள்ளார்.
வடக்கில் இன்று பொலிஸ்துறை அரசாங்கத்தினால் அல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கட்டுப்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்காக தமது 16 வாக்குகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படுத்துகிறது என்றும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.