சிறிலங்காவின் தென்பகுதியில் நேற்றிரவு கேட்ட பாரிய வெடிப்புச் சத்தம் மற்றும் திடீரெனத் தோன்றிய ஒளிப்பிளம்பினால் மக்கள் மத்தியில் பதற்றமான நிலை காணப்பட்டது.
நேற்றிரவு 8.45 மணிக்கும் 9 மணிக்கும் இடையில், பெரும் இரைச்சல் மற்றும் வெடிப்புச் சத்தம் கேட்டதுடன், வானத்தில் ஒளிப்பிளம்பும் அவதானிக்கப்பட்டது. மாத்தறை, அக்குரஸ்ஸ, தெனியாய பகுதி மக்கள் இந்த சத்தத்தை கேட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் கரையோரத்தில் வசிக்கும் மக்களில் சிலர், வானத்தில் இருந்து ஒளிப்பிளம்பு தோன்றியதையும் கண்டுள்ளனர்.
தென்மாகாணத்தின் பல பகுதிகளிலும் வசிக்கும் மக்கள், வித்தியாசமான ஒளிப்பிளம்பு மற்றும் ஒலியைக் கேட்டதாக முறையிட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய பேச்சாளர் அத்துல கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
மாத்தறை, காலி பகுதிகளில் கடலை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் சிறிய நில அதிர்வு போன்ற சத்தத்தையும் உணர்ந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரும் இரைச்சலுடன் வெடிப்புச் சத்தம், வானில் காணப்பட்ட ஒளிப்பிளம்பினால் தென்மாகாண மக்கள் நேற்றிரவு பதற்றமாக காணப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது, தென்பகுதி வானில் எந்த விமானங்களும் பயணம் செய்யவில்லை என்று விமானப் போக்குவரத்து அதிகாரசபையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட கொழும்பு பல்கலைக்கழக பௌதிக விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன, விண்கல் ஒன்றினால் ஏற்பட்ட வெடிப்புச் சத்தமாக அது இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.
“இதுபோன்ற வெடிப்புகள், ‘நெருப்புப்பந்து வெடிப்பு’ என்று அழைக்கப்படுகிறது. விண்கல் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்ததும் ஏற்படுகிறது.
இந்த விண்கல் 50 செ.மீஅளவுடையதாக இருக்கலாம். ஒவ்வொரு விண்கல்லும், பூமியின் வளிமண்டலத்துக்குள் செக்கனுக்கு 65 கி.மீ வேகத்தில் பிரவேசிக்கும்.
அதிக வேகத்தினால் வளிமண்டலத்துக்குள் நுழைந்ததும், வெப்பத்தினால் வெடித்துச் சிதறும். அதனால் தான் வெடிச்சத்தம் எழுக்கிறது.
வெவ்வேறு நிற ஒளியுடன், விண்கல் நுழைந்ததை மக்கள் பார்த்துள்ளனர். பெரும்பாலானவர்கள் பச்சை நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் கண்டுள்ளனர்.
இந்த வெடிப்பு சேதங்களை ஏற்படுத்தக் கூடும். ஆனால், அதிஸ்டவசமாக, சிறிய துண்டுகளாக உடைந்துள்ளது.
விண்கல்லின் பாகங்களை மக்கள் தொடக் கூடாது. அதில் கதிரியக்க தாக்கங்கள் இருக்கக் கூடும். அதனால் மனித உடலுக்கு பாதிப்பு ஏற்படும். இடனந்தெரியாத பக்ரீரியாக்கள் அதில் இருக்கும்.” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அதேவேளை, நேற்றிரவு தோன்றிய ஒளிப்பிளம்பு பற்றிய எந்தச் சம்பவமும் பதிவாகவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறிலங்கா கடற்படை, விமானப்படை என்பனவும், எத்தகைய சம்பவங்களும் இடம்பெறவில்லை என்று உறுதி செய்துள்ளன.