இலங்கை முஸ்லிம்களுக்கு அரபுலகும் முஸ்லிம் நாடுகளும் கைகொடுத்து உதவும் என்று நினைப்பது மடமைத்தனம்
17 Oct,2017
இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்களும் பிரச்சினைகளும் ஏற்படும் போது அரபுலகும் முஸ்லிம் நாடுகளும் கைகொடுத்து உதவுமென்று நாம் நம்பிக்கை கொண்டிருப்பது மடமைத்தனமானதெனவும் ரோஹிங்யா முஸ்லிம்களின் அவலங்கள் நமக்கு நல்ல படிப்பினையாக அமைந்துள்ளதெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
சளையன.தயீப
திஹாரிய ஈமானிய அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக் கிழமை திஹாரியில் நடை பெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர், பட்டம் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் நினைவுச்சின்னங்களையும் வழங்கினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் உரையாற்றும் போது கூறியதாவது, முஸ்லிம் நாடுகள் வளமாகவும் பலமாகவும் இருக்கின்ற அதேவேளை, உலக நாடுகளில் சிறுபான்மையாக வாழும் நமது சமூகத்தவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது அவர்கள் தட்டிக்கேட்பார்கள் என்று எவரும் எதிர்பார்க்க வேண்டாம். அவ்வாறான ஆளுமையும் துணிவும் இந்த நாடுகளுக்கு இருந்திருந்தால் ரோஹிங்யாவில் முஸ்லிம்களுக்கு என்றோ விடிவு கிடைத்திருக்கும்.
அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற சதிகாரர்களின் ஆலோசனைகளுடன் இன்று உலகமெல்லாம் அழிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் நாடுகளுக்கிடையே திட்டமிட்டு பிளவுகளும், பிரிவினைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று ஒரே நாட்டுக்குள்ளே பிரச்சினைகள் உருவாக்கப்பட்டு சமூகங்களை மோதவிடும் மிகப்பெரிய கைங்கரியம் இன்று இடம்பெற்று வருகின்றது.
இந்தவகையில் இலங்கை முஸ்லிம்களாகிய நாம் மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ளவேண்டும். மார்க்க ரீதியிலோ கொள்கை ரீதியிலோ பிளவுண்டு நமது ஒற்றுமைக்கு நாமே வேட்டுவைத்து நமக்கிடையே மோதிக்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். சமுதாய ஒற்றுமையை குலைக்க எவரும் துணைபோகக் கூடாது.
இதேவேளை, இரண்டு வருடகாலமாக ஆட்சியாளர்களின் நடவடிக்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க நன்மைகள் கிடைக்காமை வேதனையளிக்கின்றது.
இருந்தபோதும் நாம் அனைவரும் இணைந்து இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் கொண்டுவந்த இந்த ஆட்சியை மாற்ற வேண்டுமெனவும் ஆட்சியிலிருந்து நாம் வெளியேறவேண்டுமென்றும் நம்மில் சிலர் குரல் எழுப்புவதை காணக் கூடியதாக இருக்கின்றது. இந்தக்கோரிக்கை சமூகத் துக்கு எத்தகைய பயனை அளிக்கும் என்பதை நாம் சிந்திப்பதற்கும் கடமைப் பட்டிருக்கின்றோம் என்றார்.