விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் தயாரித்தவர் கைது
06 Oct,2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத முறையில் கட்டுத் துப்பாக்கிகள் தயாரித்ததாக கூறப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டிருந்த நபர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த நபர் விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்ட காலமாக ஆயுத உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் பெருமளவான ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்த பொலிஸார் அந்த பகுதியிலிருந்து கட்டுத்துவக்கு 19, முழுதாக தயாரிக்கப்பட்ட துவக்கு 3, வெடிமருந்து 1 கிலோ கிராம், துப்பாக்கி குண்டுகள் 2000 மற்றும் துப்பாக்கி தயாரிக்கும் உபகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியிருந்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த நபர் விடுதலைப் புலிகள் அமைப்பில் நீண்ட காலமாக ஆயுத உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, சந்தேகநபரை நேற்று நீதிமன்றில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியிருந்த நிலையில் அவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.