இலங்கை: கிழக்கு கடலில் அழிந்து வரும் பவளப்பாறைகள்
03 Oct,2017
இலங்கையில் கிழக்கு கடற்பரப்பில் பரவி வருகின்ற நட்சத்திர மீன்களினால் பவளப்பாறைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கடல் தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த நட்சத்திர மீன்கள் தொடர்பாக ஆய்வுகளை முன்னெடுக்குமாறு கடல் தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீர தேசிய நீரியல் வள மற்றும் ஆராய்ச்சி அபிவிருத்தி முகவர் நிறுவனத்திற்கு கட்டளையிட்டுள்ளார்.
இந்த ஆய்வு பணிகளுக்கு கடற்படையினரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளவும் அவர் கேட்டுகொண்டுள்ளார்.
கிழக்கு கடற்பரப்பில் பவளப்பாறைகளுக்கு அழிவை ஏற்படுத்தும் நட்சத்திர மீனினம் பெருகி வருவது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கடல் தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வகை நட்சத்திர மீன்களினால் வெளியேற்றப்படும் ஓரு ரசாயனம் காரணமாக பாவளப்பாறைகள் அழிந்து வருவதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்னரும் இது போன்ற நிலைமை தோன்றியவேளை, அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.