பெண்களுக்காக நடத்தப்படும் முதல் சேனல்
22 May,2017
...............................
ஆப்கானிஸ்தான் நாட்டில் முழுவதும் பெண்களால் நடத்தப்படும் பெண்கள் சார்ந்த நிகழ்ச்சிகள் கொண்ட சேனல் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு வரை தாலிபான்களில் ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஆப்கானிஸ்தான் நாட்டில், அப்போது பெண் குழந்தைகள் கல்வி கற்கவும், பெண்கள் வேலைக்கு செல்லவும் தடை இருந்தது. பின்னர் ஜனநாயகப் பாதைக்கு திரும்பிய அந்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பெண்கள் தங்களது உரிமைகளை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டில் முற்றிலும் பெண்களுக்காகவே நடத்தப்படும் தொலைக்காட்சி சேனல் ஒன்று உதயமாகிறது. ஸான் டி.வி. என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள். ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை தொலைக்காட்சிகளில் பெண்கள் பணியாற்றுவதற்கு பண்பாட்டு முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. அவற்றை உடைப்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
”முழுவதும் பெண்களால் நடத்தப்படும் இந்த தொலைக்காட்சி தொடங்கியிருப்பதில் மகிழ்ச்சி, இந்த சேனல் பெண்களுக்கான உரிமைகளை பறை சாற்றி அவர்கள் இழந்த உரிமைகளை மீண்டும் பெற்று தரும்” என 20 வயது நிகழ்ச்சி தயாரிப்பாளர் காதிரா அஹமதி தெரிவித்துள்ளார்.