இரவில் பஸ்ஸை வழிமறித்து பயணி மீது தாக்குதல்: பொலன்னறுவையில் சம்பவம்
16 Apr,2017
முல்லைத்தீவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த இ. போ.சபை முல்லைத்தீவு டிப்போவுக்குச் சொந்தமான பஸ் மீது பொலன்னறுவை செவனப்பிட்டிய எனுமிடத்தில் வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் அதில் பயணம் செய்த மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை 15.04.2017 இரவு 10.20 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
குறித்த பஸ் பொலன்னறுவை செவனப்பிட்டியை நெருங்கும்போது முச்சக்கரவண்டியொன்று கொழும்பு பொலன்னறுவை நெடுஞ்சாலைக்குக் குறுக்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.
அவ்விடத்தில் பஸ் நிறுத்தப்பட்டதும் சடுதியாக பஸ்ஸு க்குள் ஏறிய கும்பலொன்று பஸ்ஸிலிருந்த குறித்த பயணியை பஸ்ஸிலிருந்து கீழே இறக்கி எடுத்து சரமாரியாகத் தாக்கியதுடன் அவரை வீதியில் தள்ளி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்கப்பட்டு உணர்வற்ற நிலையில் இரத்தவாறாக வீதியில் வீசப்பட்ட அவரை சக பயணிகள், பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோர் மீட்டு வெலிக்கந்தை வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.
பின்னர் அவர், மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்றப்பட்டார்.
தாக்குதலை மேற்கொண்ட கும்பல் யுPமு 6097 இலக்க முச்சக்கரவண்டியிலேயே தப்பிச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டு திகிலடைந்த சக பயணிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தாக்கப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த பிரயாணிக்கும் இடையில் வவுனியாவில் வைத்து பஸ்ஸுக்குள் ஏற்பட்ட சிறியதொரு வாக்குவாதத்துக்கு பழிதீர்க்கப்பட்டதாக தாக்குதல் நடத்தியவர்கள் உரக்கக் கூச்சலெழுப்பி விட்டுத் தப்பிச் சென்றனர் என்று பயணிகள் தெரிவிக்கின்றனர்.
பிரயாணிகள், சாரதி, நடத்துனர் ஆகியோர் வெலிக்கந்தைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்ததன் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.