கட்டார் பணிப்பெண்களே அவதானம் : சிறு நீரகம் திருடப்பட்டுள்ளது
05 Mar,2017
........................
கட்டாருக்கு பணியாளராக, மூன்று வருடங்களுக்கு முன்பு சென்ற இந்தோனேஷியப் பெண் அறியாமலேயே, அவரது சிறு நீரகம் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கட்டாரின் தோஹா நகரில் மூன்று வருடங்களுக்கு முன்பு வீட்டுப் பணியாளராக சென்ற,
இந்தோனேசியாவை சேர்ந்த 25 வயதான ஷி ரபிதா என்பவரின் சிறுநீரகம், அவருக்கு தெரியாமலேயே திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடொன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக ரபிதா தெரிவித்துள்ளதாவது தொழில் முகவர்கள், தன்னை அபுதாபியிலுள்ள வீட்டிற்கு பணியாளராக அனுப்புவதாக சொல்லி,
கட்டாரின் தோஹா நகரிலுள்ள ஒரு பாலஸ்தீனர் வீட்டிற்கு பணியாளராக அனுப்பியதாக தெரிவித்துள்ளார். மேலும் குறித்த வீட்டிற்கு சென்ற தன்னை, உடல் ஆரோக்கியமாகவுள்ளதாக பரிசோதிக்க வேண்டுமென கூறி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர். பின் இரண்டு நாட்கள் கடந்த நிலையில் மீண்டும் வைத்திய சாலைக்கு அழைக்கவே தான் காரணம் கேட்கவே, உடல் பலவீனமாகவுள்ளது ஒரு ஊசி போட வேண்டுமெனக்கூறி அழைத்து சென்று, தன்னை மயக்கமடைய வைத்து,
சிறுநீரகத்தை திருடியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது உடல் மிகவும் பலவீனமடைந்ததை உணர்ந்த நிலையில், உடலிலிருந்து ரத்த கசிவு ஏற்பட்டதாகவும், அது குறித்து வைத்தியரிடம் காரணம் கேட்கவே, உடல் ஆரோக்கியம் இல்லை என புகார் அளித்து, தன்னை முகவர் ஊடாக மீண்டும் தாய் நாட்டிற்கே அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
தாய் நாட்டிற்கு வந்த பிறகும் தனது உடல் சோர்வடைந்து வந்ததோடு, அடிக்கடி வயிற்று வலி வந்து போகவே, மூன்று வருடம் கடந்த நிலையில் வைத்திய சாலைக்கு சென்ற தனக்கு, ஒரு சிறுநீரக களவாடப்பட்டுள்ள அதிர்ச்சி செய்தியை வைத்தியர் கூறியதாக ரபிதா அந்நாட்டு ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அத்தோடு தனது சிறு நீரகம் களவாடப்படுவதற்கு காரணமான முகவர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக இந்தோனேசிய அரசாங்கம் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.