சுவிற்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டுள்ள மற்றும் அரசியல் தஞ்சக் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்தப்படும் அபாயம் எழுந்துள்ளது.
சுவிற்ஸர்லாந்து அரசாங்கத்திற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் குடியேறிகள் தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட மிக முக்கிய உடன்படிக்கையொன்றை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது.
ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள சுவிற்ஸர்லாந்து அரசின் நீதி மற்றும் காவல்துறை அமைச்சர் சிமோனெட்டா சோம்மருகா நேற்றைய தினம் ஸ்ரீலங்காவின் உள்துறை அமைச்சர் எஸ்.பி. நாவின்னவுடன் குடியேறிகள் தொடர்பான உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டார்.
இந்த உடன்படிக்கை ஊடாக சுவிற்ஸர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்படும் அரசியல் தஞ்சக் கோரிகளுக்கு ஸ்ரீலங்காவில் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்பது உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை மிகவும் முக்கியமானது என்றும், குடிவரவுத் துறையில் தாங்கள் நடைமுறைப்படுத்திவரும் நடைமுறைகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்றும் மூன்று நாள் விஜயமாக ஸ்ரீலங்கா வந்துள்ள சுவிற்ஸர்லாந்து நீதி அமைச்சர் தெரித்துள்ளார்.
அதேவேளை, இந்த உடன்படிக்கை அரசியல் தஞ்சக் கோரிக்களை நாடு கடத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவிஸர்லாந்தில் 50 ஆயிரம் இலங்கையர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஈழத்தமிழர்கள் ஆவர். கடந்த 30 வருட யுத்தம் காரணமாக ஏற்பட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள் உட்பட உயிர் ஆபத்துக்களை அடுத்தே இவர்கள் புலம்பெயர்ந்து சுவிஸர்லா்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
இவர்கள் உட்பட புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் உட்பட புலம்பெயர் சமூகத்தினர் நாடு திரும்ப வேண்டும் என ஸ்ரீலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அதேவேளை, தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியதை அடுத்து ஸ்ரீலங்காவில் மனித உரிமைகளும், தனி மனித சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிவரும் சுவிஸர்லாந்து உட்பட மேற்குலக நாடுகள், ஈழத் தமிழர்களின் அரசியல் தஞ்சம் கோரிக்கைகளை நிராகரித்து வருவதுடன், உடனடியாக நாடு கடத்தியும் வருகின்றன.
எனினும், ஸ்ரீலங்காவில் இன்னமும் இயல்பு நிலை ஏற்படவில்லை என்றும், நாடு கடத்தப்படும் ஈழத்தமிழர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே அரச படையினராலும, புலனாய்வுத் துறையினராலும் கைதுசெய்யப்பட்டும், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சுவிஸர்லாந்து அரச சார்பற்ற அமைப்புக்கள் மாத்திரமன்றி சர்வதேச மனித உரிமை அமைப்புக்களான சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு உட்பட பல அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுவிஸர்லாந்து நீதி அமைச்சரை சந்தித்த வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனும், நாடு கடத்தப்படும் ஈழத் தமிழர்களுக்கு ஸ்ரீலங்காவில் பாதுகாப்பு உத்தரவாதம் கிடைக்கும் அளவிற்கு நிலமை இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று கூறியிருந்தார்.
மிகவும் கொடூரமான சட்டமாகக் கருதப்படும் பயங்கரவாத தடுப்புக் கட்டளைச் சட்டம் அமுலில் இருப்பதால், நாடு கடத்தப்படும் ஈழத் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறை வைக்கப்படும் நிலமையும், சித்திரவதைகளுக்கு ஆளாகும் அபாயமும் இருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
பயங்கரவாதத் தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பத்து 15 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்துவரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாத அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்காத நிலையில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதாக கருத முடியாது என்றும் வட மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும் இந்த எச்சரிக்கைகள் அனைத்தையும் புறந்தள்ளிய நிலையில், ஸ்ரீலங்காவில் தங்கியிருக்கும் சுவிஸர்லாந்து அரசின் குடியேறிகள் தொடர்பான விவகாரங்களுக்குப் பொறுப்பான மத்திய அரசின் அமைச்சர் நீதி மற்றும் காவல்துறை அமைச்சர் சிமோனெட்டா சோம்மருகா, ஸ்ரீலங்கா அரசுடன், அரசியல் தஞசக் கோரிகளை நாடு கடத்துவதை உறுதிசெய்யும் உடன்படிக்கையை கைச்சாத்திட்டிருக்கின்றார்.
சுவிஸர்லாந்து அரசு சித்திரவதைக்கூடத்திற்குள் மக்களை தள்ளிவிடுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரித்துள்ள சுவிஸ்ர்லாந்து நீதி அமைச்சர் சிமோனெட்டா சோம்மருகா, இந்த புதிய உடன்படிக்கைக்கு அமைய நாடு கடத்துவதற்கு முன்னர் நாடு கடத்தப்படவுள்ள அனைவரும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு உதவிகள் தேவையா அல்லது அகதி அந்தஸ்த்து வழங்கலாமா, அல்லது நாடு கடத்துவது சரிதானா, அது நியாயமான தீர்மானமா என்பது தொடர்பில் விரிவாக ஆராய்ந்த பின்னரே இந்த புதிய உடன்படிக்கைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என சுவிஸர்லாந்து நீதி மற்றும் காவல்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எது எவ்வாறாயினும் அடுத்துவரும் தினங்களில் ஸ்ரீலங்காவுடன் புதிதாக ஏற்படுத்திக்கொண்ட குடியேறிகள் தொடர்பான புதிய உடன்படிக்கைக்கு அமைய சுவிஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் நாடு கடத்தப்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அகதிகளின் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச அமைப்புக்களும், அகதிகள் சட்டத்தரணிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அது மாத்திரமன்றி சுவிஸர்லாந்து அரசின் இந்த நடவடிக்கையை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய ஐரோப்பிய நாடுகளும் ஸ்ரீலங்காவுடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டு அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை நிராகரித்து அவர்களை நாடு கடத்தக்கூடிய ஆபத்து நீடிப்பதாகவும் அகதிகள் தொடர்பான சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் இவற்றை நிராகரிக்கும் சுவிஸர்லாந்து அரசு, கடந்த யூலை மாதமும் ஈழத் தமிழர் ஒருவரின் அகதி கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அதேவேளை சுவிஸர்லாந்து குடிவரவுத்துறை அலுவலகத் தகவல்களுக்கு அமைய 2016 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் இலங்கையர்களின் 1316 அரசியல் தஞ்சம் கோரிய விண்ணப்பங்கள் தீர்மானம் எடுக்கப்படாது வைக்கப்பட்டிருப்பதாக அந்த அலுவலக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
அதேவேளை இந்தக் காலப்பகுதியில் இலங்கையர்கள் ஐயாயிரம் பேர் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்ததாகவும். இவர்களில் 3674 பேருக்கு அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இவர்களில் 1613 பேருக்கு பாரிய உயிர் ஆபத்து இருக்கின்றது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுவிஸர்லாந்து குடிவரவுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.