வேகமாக கரையும் கிரீன்லாந்து பனிப்பாறைகள்
28 Sep,2016
நாள்தோறும் பெருகி வரும் வாகனப் போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வௌியேறும் புகையால் உலகம் வெப்பமயமாதல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் பருவநிலை மாற்றம் , கடல் மட்டம் உயர்வு போன்ற விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் டென்மார்க் நாட்டின் ஆர்கஸ் பல்கலை விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் உலகில் மிகப் பெரிய பனித்தீவாக இருக்கும் கிரீன்லாந்து பனிப்படலம் மிக வேகமாக கரைந்து வருவதாக எச்சரித்துள்ளனர்.
சுமார் 23 லட்சம் சதுர கிலோமீ்ட்டர் அதாவது நம் இந்திய நாட்டின் முக்கால்வாசி பரப்பளவை கொண்ட கிரீன்லாந்து உலகில் மிகப் பெரிய தீவுகளில் ஒன்றாக இருக்கிறது. கிரீன்லாந்தில் இருக்கும் மொத்த பனிப்படலமும் உருகிவிடும் பட்சத்தில் உலகின் கடல் மட்டம் சுமார் 23 அடி வரை உயர்ந்து விடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த அளவுக்கு பெரிய பனிப்படலத்தை கொண்டுள்ள கிரீன்லாந்து தீவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பனிப்பாறைகள் மற்றும் பனிப்படலங்கள் உருகுகின்றன. முன்பு உருகியதை காட்டிலும் எட்டு சதவிகிதம் அதிக அளவு உருகிவருவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது சாட்டிலைட் புகைப்படங்கள் மூலமாக நிரூபணமாகி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பனிப்பாறைகள் மற்றும் பனிப்படலங்கள் உருகும் சதவிகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தால் இன்னும் சில ஆண்டுகளிலேயே பல கடற்கரை நகரங்கள் கடல் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.