பிரான்ஸ் நகர சாலையில் ஒயின் வெள்ளம்!
06 Aug,2016
தென் பிரான்ஸ் நகர் ஒன்றில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒயின் குழாயை உடைத்ததால், சாலையில் ஒயின் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஒயின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த, அவசர சேவைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தரையின் கீழ் தளத்தில் உள்ள கார் நிறுத்துமிடங்களுக்குள் ஒயின் வெள்ளம் புகுந்துவிடாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய ஒயின் உற்பத்தி பிராந்தியங்களில் ஒன்றான லாங்குடாக் - ருசிலோன் என்ற துறைமுக நகரில் உள்ள செடே பகுதியில் இந்தப் போராட்டம் நடந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், ஒயின் உற்பத்தியாளர்களுக்கான பிராந்திய நடவடிக்கைக் குழு (க்ரேவ்) என்ற தீவிரவாதக்குழுவைச் சேர்ந்தவர் என தங்களைக் கூறிக் கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஸ்பெயினில் இருந்து மிக மலிவான விலையில் ஒயின் இறக்குமதி செய்யப்படுவதைக்
`எங்கள் கோரிக்கைகளை யாரும் செவிமடுப்பதில்லை. அதனால்தான் இந்தத் தாக்குதலில் இறங்கினோம் ' என தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் பிரான்ஸ் 3 தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
இந்த ஒயின் வெள்ளத்தால், கீழ் தளங்கள் மற்றும் வீடுகளில் ஒயின் வெள்ளம் புகுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டின் துவக்கத்தில், தென் பிரான்ஸ் எல்லையில் உள்ள லீ பவ்லோ நகரில், ஸ்பெயினில் இருந்து வந்த ஒயின் லாரிகளின் குழாய்களை சாலையில் திறந்துவிட்டு, பிரான்ஸ் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, பிரான்ஸ் தூதரை அழைத்து ஸ்பெயின் தனது கவலையை வெளிப்படுத்தியது.
தற்போது நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஒயின் உற்பத்தியாளர்களின் தொழிற்சங்க பிரதிநிதி ஃப்ரெட்ரிக் ரூனெட், பிரான்ஸ் மதுபானக் கடைகளில் மலிவு விலை ஒயின் குவிக்கப்படுவது கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.