அகதிகள் கடத்தலில் தொடர்புடைய 38 பேர் இத்தாலியில் கைது
05 Jul,2016
ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயிரக்கணக்கான அகதிகள் கடத்தலில் தொடர்புடையவர்கள் என சந்தேகப்படும்படியான 38 பேரை இத்தாலிய போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவர்களில் 25 பேர் எரித்ரிய நாட்டினர். 12 பேர் எத்தியோப்பியர்கள். ஒருவர் இத்தாலியர்.
இது பற்றி அந்நாட்டின் சிசிலியன் நகர போலீசார் ஒருவர் கூறும்பொழுது, இத்தாலியின் 10 நகரங்களில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய அந்த நபர்கள் ஆள் கடத்தல், போதை பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு நிதி தொடர்புடைய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட எரித்ரிய நாட்டு நபர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நபர், வட ஆப்பிரிக்கா மற்றும் இத்தாலி நாடுகளில் செயல்பட்டு வரும் சர்வதேச அகதிகளை கடத்தும் கும்பல் ஒன்று முதன்முறையாக இத்தாலியில் மீண்டும் குற்ற செயல்களை முழுவதும் செயல்படுத்திட முனைந்துள்ளது என கூறியுள்ளார்.
இத்தகவல் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்நபர் அளித்த தகவலை தொடர்ந்து கடந்த ஜூன் 13ந்தேதி மத்திய ரோம் நகரில் உள்ள ஒரு சிறிய நறுமண பொருள் விற்பனை செய்யும் கடையில் போலீசாரால் சோதனை நடத்தப்பட்டது. இதில் 5 லட்சத்து 26 ஆயிரம் யூரோக்கள் (5 லட்சத்து 85 ஆயிரம் டாலர்கள்), 25 ஆயிரம் டாலர்கள் மற்றும் அந்த கும்பலின் உறுப்பினர்கள் பற்றிய தகவல் அடங்கிய முகவரி புத்தகம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.
2ம் உலக போருக்கு பின்னர் லட்சக்கணக்கான அகதிகள் லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல கடத்தல்காரர்களிடம் பணம் கொடுக்கின்றனர். அதன்பின் கடல் வழியே பழுதடைந்த படகுகளில் பயணம் செய்கின்றனர். இந்த வருடம் இத்தாலிக்கு 60 ஆயிரம் அகதிகள் படகுகளில் சென்று சேர்ந்துள்ளனர்.