இது தான் நீங்கள் : அது தான் நாங்கள்
24 Feb,2016
பிறந்து சில மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்றை , நைஜீரியா நாட்டில் தன்னந்தனியே விட்டுவிட்டார்கள் பெற்றோர். இச்சிறுவன் பட்டினியால் இறக்கவேண்டும் என்பதே அவர்கள் எண்ணமாக இருந்துள்ளது. காரணம் என்னவென்றால் , இந்தச் சிறுவன் ஒரு அமனுஷ சக்தி என்றும். இவனுக்கு பேய் பிடித்துள்ளதாகவும் பெற்றோர் நம்பியுள்ளார்கள். இது தான் முழுமையான காரணமா தெரியவில்லை. ஆனால் அல்லும் பகலும் வேகாத வெய்யிலில். உணவு உடை இன்றி இச்சிறுவன் அலைந்து திரிந்து வாழ்கையின் இறுதிக் கட்டத்திற்கே சென்றுவிட்டான். தெய்வம் மனித ரூபத்தில் வரும் என்பார்கள். அது நிச்சயமாக உண்மை தான். அஞ்சா ரிகரின் லோவன் என்னும் டென்மார்க் நாட்டுப் பெண், நைஜீரியாவுக்கு சுற்றுலாப் பயணம் ஒன்றை மேற்கொண்டவேளை. இச்சிறுவன் அலைந்து திரிந்த வீதிக்கு தற்செயலாகச் சென்றுள்ளார்.
இச்சிறுவன் உடலில் சூரியன் சுட்ட எரி காயங்கள், உடலின் பல பகுதிகளில் புண் அதில் சில இடங்களில் ஒட்டுண்ணி புழுக்கள் ஒட்டிக்கொண்டு இருக்கக் கண்டு அவர் கண் கலங்கிவிட்டார். என்ன தான் நடக்கிறது என்று கேட்டால். ஊர் மக்கள் சொன்ன விடையம் அவரை மேலும் திகைப்பில் ஆழ்த்தியது. தாகத்தில் தவித்துக்கொண்டு இருந்த அச்சிறுவனுக்கு முதலில் தண்ணீர் கொடுத்து. அவனை ஒரு துணியால் போத்து தனது காரில் படுத்தினார் அந்த டென்மார்க் அம்மையார். உடனடியாக எங்கே சிறுவர்களுக்கான வைத்தியசாலை இருக்கிறது என்று அறிந்து அங்கே அவனைக் கொண்டுபோய் சேர்க்க அவர் முடிவு செய்தார். எந்த ஒரு பெயரும் இல்லாமல் இருந்த அச்சிறுவனுக்கு "ஹோப்பி" என்று பெயர் சூட்டினார். வெள்ளைக்காரப் பெண் எடுத்து வந்ததனால் உடனே வைத்தியசாலை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு. அவனது வயிற்றில் காணப்பட்ட புழுக்களை அகற்றி, அவனைக் குளிப்பாட்டி ரத்ததையும் ஏற்றியுள்ளார்கள்.
அவன் நிலையை உடனே படம் பிடித்த டென்மார்க் சீமாட்டி , அதனை வெளிநாட்டு மீடியாக்களுக்கு அனுப்ப பெரும் செய்தியாக இது பிரசுரிக்கப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து மட்டும் பல நூறு மக்கள் இச்சிறுவனுக்கு உதவ முன்வந்துள்ளார்கள். இதனால் இச்சிறுவனின் எதிர்காலம் தற்போது நம்பிக்கை மிக்கதாக மாறியுள்ளது. படிப்பறிவில்லாத மக்கள் செய்யும் கொடுமை இது ! படித்த மற்றும் பண்புள்ள மக்கள் செய்யும் காரியம் இதுதான் என்று உலகிற்கு உணர்த்தும் வண்ணம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது !