சமூக வலைத்தளங்களும், இணையமும் மக்கள் மத்தியில் பேராதிக்கம் செலுத்தத் தொடங்கிய பின்னர் மிகவும் பிரபலமடைந்தது காதலர் தினமாகும்.
அனைத்து இடங்களிலும் காதலர்தின வெளியீடுகள் பெருந்தொகையாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அந்தவகையில் டென்மார்க்கிலும் காதலர் தினம் இன்று களைகட்டியுள்ளதை அனைத்து வலைத்தளங்களிலும் காணமுடிகிறது.
காதலர் தின கவிதையை வெளியிடுவது, பாடல் இசைத்து வெளியிடுவது, குறும்படம் வெளியிடல், இசையும் கதையும் என்று அனைவரும் தத்தமது தகுதிக்கு ஏற்ப காதலர் தினத்தை சிறப்பித்துள்ளனர்.
இது குறித்து அவிசன் .டி.கே என்ற டேனிஸ் இணையம் 1004 பேரிடம் கருத்துக்கணிப்பொன்றை நடத்தியுள்ளது..
01. நீர் யாரோ ஒருவரை காதலித்துள்ளீரா.. என்ற கேள்விக்கு 17 வீதம் ஆம் என்று தெரிவித்துள்ளனர்.
02. காதலுக்குள் போகாமல் நண்பர்களாக இருப்போர் 14 வீதமாகும்.
03. காதலை வெளிப்படுத்தாமல் இருப்போர் 27 வீதம்
04. இதுவரை காதலிக்கவில்லை என்று கூறியோர் 43 வீதமாகும்.
மேலும் காதலர் தினம் என்று கூறி காதலை அதன் தகுதிக்கும், யதார்த்த நிலைக்கும் அப்பால் ஒரு ஓர் உணர்வுபூர்வமான காவிய உணர்வாக்கி அணுக முற்பட்டு ஈற்றில் தாம் தேடிய காவியப் புதுமை கிடைக்காது சோர்வடைவோர் உலகில் அதிகமாக உள்ளார்கள்.
ஆகவே காதலர் தினத்தில் காதல் சொர்க்கம் திறப்பதில்லை என்ற புரிதல் அவசியம் என்றும் உளவியலாளர் கூறுகிறார்கள்.
ஒரு நாள் கூத்துக்கு மீசை வழித்த கதையாக இது மாறிவிடக்கூடிய ஆபத்திருப்பதையும் காதலர் தினத்தின் செயற்பாடுகள் உணர்த்துவதாக உள்ளன.
இருப்பினும் பொருட்களை சந்தைப்படுத்தலுக்காக காதலும் வியாபாரமாகும் தினமாக இது மாறிவருவது கடைகளில் விற்கப்படும் பரிசுப் பொருட்களால் உணரப்படுகிறது.
காதல் தினம் உச்சமடையும் நாடுகளின் உச்சந்தலை உச்சியில் விவாகரத்து கொடிகள் பட்டொளி வீசி பறப்பதும் அவதானிப்பிற்குரியது..
இருப்பினும் ஒரு பஸ்ரலாவன் பெஸ்ற் போல காதலர் தினமும் வியாபாரம் களைகட்டுவதை கடைக்காரரின் மகிழ்ச்சியில் காண முடிகிறது.
அனால் டேனிஸ் ஊடகங்களில் காதலர் தினம் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்கள் போல முக்கியம் பெறவில்லை.
பயங்கரவாதத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை பருவக்காதலுக்கு கொடுக்கவில்லைஸ
தீவிரவாதத்தை வளர்க்கும் இணையங்கள் மூடப்பட வேண்டும்..
கடும்போக்குவாதத்தையும், தீவிரவாதத்தையும் உசுப்பேற்றிவிடும் இணையப்பக்கங்களை கேட்டுக் கேள்வியின்றி இழுத்து மூடிவிட வேண்டுமென சோசல் டெமக்கிரட்டி கட்சித் தலைவி மெற்ற பிறடிக்சன் கேட்டுள்ளார்.
டென்மார்க்கில் ஓமர் அப்டில் ஹமீட் என்ற 22 வயதுடைய பாலஸ்தீன பின்னணியுடைய இளைஞர் சென்ற ஆண்டு நடத்திய பயங்கரவாதத் தாக்குதலின் ஓராண்டு நினைவுகளில் இக்கருத்து வெளியாகியுள்ளது.
ஒருவரை தீவிரப்போக்குடையவராக மாற்றுவதில் இணையப் பக்கங்கள் மிகவும் முக்கியமான கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது, இத்தகைய செயலில் ஈடுபடும் பக்கங்களை முடக்க துரித நடவடிக்கை வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடும்போக்குவதமடைதலுக்கு எதிராக தமது கட்சி போடும் அடுத்த காலடி இதுவென்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இத்தகைய பத்திரிகைத் தடைகள், தணிக்கைகள் போன்ற செயற்பாடுகளால் கடும்போக்குவாதத்தை வீழ்த்த முடியும் என்று தெரியவில்லை, அதற்கு சரியான ஆதாரங்களும் இல்லை என்று டேனிஸ் சிந்தனைப்பிரிவு நிர்வாகி ஜாக்கப் மக்கொன்காமா தெரிவிக்கிறார்.
இந்தப் பாதை கடும்போக்குவாதத்தின் பக்கமாக மூளைச் சலவை செய்யும் செயலை வெற்றிகொள்ள உரிய பாதை அல்ல என்றும் அவர் கூறினார்.
முகநூல்களில் வரும் மிரட்டல்கள், மோசமான அச்சுறுத்தல்களுக்கு எதிராக நடடிவடிக்கை எடுக்க இயலாத நிலை மேலை நாடுகளில் காணப்படுகிறது, பேஸ்புக், ரிவிற்றவர் போன்றன வடக்கு ஆபிரிக்காவில் ஆட்சியையே மாற்றியுள்ளனஸ
சமூக வலைத்தளங்களை பறக்கவிட்டு இணையப்பக்கங்களை மூடுவதால் என்ன பயன்..?
இப்படி பல கேள்விகள் தொடராக உள்ளன.. ஒவ்வொரு கட்சியும் ஆளாளுக்கு கருத்துக்களை அள்ளி வீசுவது வாராந்த வாண வேடிக்கையாக இருக்கிறது..
இணையம் இல்லாத காலத்திலும் பயங்கரவாத செயற்பாடுகள் முனைப்பாக நடந்துள்ளமை கவனிக்கத்தக்கது.
அகதிகளின் குற்றச் செயல் குறைவு
தற்போது ஐரோப்பாவில் நிறைந்து வரும் தஞ்சம் கோரும் மக்களையும், வெளிநாடுகளில் இருந்து தஞ்சம் கோராமல் வருவோரையும் ஒன்றாகப் பார்ப்பது தவறு.
இரு தரப்பிலும் செய்யப்படும் குற்றச்செயல்களை வேறுபடுத்திப் பார்க்காமல் பொத்தம் பொதுவில் அகதிகள் குற்றம் செய்கிறார்கள் என்று பார்ப்பது அதைவிடப் பெரும்தவறு.
உண்மையில் அகதிகளை விட வெளிநாட்டவர் செய்யும் குற்றச்செயல்கள் அதிகமானவை என்று ஜேர்மனிய பயங்கரவாத விவகார ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
அகதி என்பவன் வாழ்வில் எல்லாவற்றையும் இழந்து இன்னொரு நாட்டில் தனது வாழ்வைத் தொடங்க வருகிறான்.. ஆகவே குற்றச் செயல்களில் இறங்கி தனது எதிர்காலத்தை அழிக்கும் மடைத்தனத்தை செய்யத் துணியமாட்டான்.
ஆனால் அவர்களுடன் ஒப்பிட்டால் வெளிநாட்டவர்களின் குற்றச் செயல்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது.. எனவேதான் பாலையும் தண்ணீரையும் ஒன்றாகக் கலக்கி இது சுவையற்ற பால் என்ற முடிவுக்கு வருவதைப் போல.. வெளிநாட்டவரையும் அகதிகளையும் வேறுபடுத்திப் பார்க்காதுஸ பொத்தாம் பொதுவில் அகதிகள் குற்றச் செயலில் ஈடுபடுகிறார்கள் என்று கூறக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
நேற்றய தினம் ஜேர்மனிய கிரிமினல் போலீஸ் பிரிவு தலைமை அதிகாரி ஊல்ப் கூச் வெளியிட்ட கருத்துக்குப் பின்னர் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.
ஜேர்மனிக்குள் சென்ற ஆண்டு மட்டும் ஒரு மில்லியன் அகதிகள் வந்துவிட்டார்கள் இவர்களில் ஒரு சிலர் செய்யும் தவறுகளை வைத்து பொத்தாம் பொதுவில் ஒரு மில்லியன் மக்களுக்கும் களங்கம் கற்பித்தல் கூடாது என்பது இதன் கருத்தாகும்.
அகதிகளிடையே குற்றச் செயல் அளவு 1.0 இருந்து 1.5 வீதமே இருக்கிறது, இதனுடன் ஒப்பிட்டால் ஜேர்மனியர்களின் குற்றச் செயல் அதிகம் என்றும் தெரிவித்திருந்தார்.
டென்மார்க்கின் 2014ம் ஆண்டு புள்ளிவிபரங்களைப் பார்த்தால் வெளிநாட்டவர்களிலும் மேலை நாடுகளை சேராத லெபனான் – மொறோக்கோ நாட்டவர்களின் குற்றச் செயல்களே அதிகமாகும்.
ருமேனியர்களின் திருட்டு தனிக்கதை.. ஆனால் சீனர்கள், சிரியா, வியட்நாம் நாடுகளில் இருந்து வந்தோரிடையே குற்றச் செயல்கள் குறைவாக இருப்பதாகவும் சுட்டிக் காட்டுகிறது.
ஒரு மில்லியன் பேர் வந்தால் இரண்டு வீதம் குற்றச் செயல்களில் ஈடுபடும் அதற்காக 98 வீதத்தையும் குற்றவாளிகளாக பார்க்கக் கூடாது என்ற விடயம் சரியான முறையில் ஊடகங்களால் எடுத்துரைக்கப்படுவதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
tks.s.durai