நின்றுகொண்டே உட்காரலாம்!
10 Feb,2016
நின்றுகொண்டே உட்காரலாம்!
நின்றுகொண்டே பல மணி நேரம் வேலை செய்யக்கூடியவர்களுக்காக ஒரு புதுமையான ஆர்செலிஸ் நாற்காலி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதைக் கால்களில் அணிந்துகொண்டால், நிற்கும்போது உட்கார்ந்த திருப்தி கிடைக்கும். நாற்காலி என்று சொல்லிக்கொண்டாலும், இது நிஜமான நாற்காலி இல்லை. நிற்கும்போது கால்களும் தொடைகளும் வலி இல்லாமல் இருப்பதற்கு உதவும் கருவிதான் இது. நாம் எந்த நிலையில் நிற்க வேண்டும் என்றாலும் அதற்கு ஏற்றார் போல இந்தக் கருவியைச் சரி செய்துகொள்ளலாம். வளைத்துக்கொள்ளலாம். ஆர்செலிஸைக் காலில் மாட்டிக்கொண்டால் எவ்வளவு நேரம் நின்றுகொண்டிருந்தாலும் உங்களுக்குக் களைப்பே வராது. கால்கள் வலிக்காது. ஆர்செலிஸ் முழுவதும் கார்பனால் உருவாக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு வளைத்தாலும் நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கக் கூடியது. இதை இயக்குவதற்கு பேட்டரிகளோ, மின்சாரமோ தேவை இல்லை.
மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளின்போது, மருத்துவர்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்காகவே ஆர்செலிஸ் நாற்காலி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள், கடைகளில் வேலை செய்பவர்கள் என்று நீண்ட நேரம் நின்றுகொண்டே இருக்கக்கூடிய வேலைகளைச் செய்யும் அனைவரும் இந்த ஆர்செலிஸைப் பயன்படுத்திகொள்ளலாம். ஜப்பானைச் சேர்ந்த நிட்டோ நிறுவனம் பல்வேறு அளவுகளில் இதைத் தயாரித்திருக்கிறது. இன்னும் பல பரிசோதனைகளைச் செய்ய வேண்டியிருப்பதால், இந்த ஆண்டு இறுதியில்தான் ஆர்செலிஸ் விற்பனைக்கு வர இருக்கிறது.
அடடா! நின்றுகொண்டே உட்காரலாம்!
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ரெக்ஸ் வீட்டில், ஒரு வாத்து குஞ்சு பொரித்தது. வாத்துக் குஞ்சுகளைப் பார்ப்பதற்காக ரெக்ஸ் அருகில் சென்றார். அப்பொழுது பான்டிகூட் என்ற வயிற்றில் பையுடைய பெருச்சாளியைப் போன்ற விலங்கின் குட்டி அங்கே இருந்தது. சின்னஞ்சிறு குட்டியைத் தன் குஞ்சுகளுடன் சேர்த்து, பாதுகாத்துக்கொண்டது தாய் வாத்து. ஒரு வாரத்தில் பான்டிகூட் காதுகள் நிமிர்ந்து விட்டன, சிறிய வால் வளர்ந்துவிட்டது. சாம்பல், பழுப்பு முடிகள் முளைத்துவிட்டன. தாய் வாத்துக்கு அது தன் குஞ்சு அல்ல என்பதும் தங்கள் இனத்தைச் சேர்ந்த உயிரினம் அல்ல என்பதும் நன்றாகத் தெரிந்தே இருக்கிறது.
ஆனாலும் அடைக்கலம் தேடி வந்த குட்டியைத் தன் இறக்கைகளுக்குள் வைத்து, பத்திரமாகப் பாதுகாத்து வருகிறது. சற்று வளர்ந்த குட்டி, வாத்தை விட்டு வெளியே சிறிது நேரம் சென்றாலும் மீண்டும் வாத்து இருக்கும் இடத்துக்கே வந்து சேர்ந்து விடுகிறது. தாய் பான்கூட் அருகில்தான் வசிக்க வேண்டும் என்கிறார் ரெக்ஸ்.