சீனப் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் இலங்கைக்குக் மேற்கொண்ட பயணங்களே இந்தியக் கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான
ஐ.என்எஸ் விக்கிரமாதித்யாவை, கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்துவதற்கு, தூண்டுதலாக அமைந்தது என்று இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக புதுடெல்லியில் கருத்து வெளியிட்ட இந்திய கடற்படையின் பேச்சாளர் கப்டன் டி.கே.சர்மா,
“விசாகப்பட்டினத்தில் அடுத்த மாத தொடக்கத்தில் நடக்கவுள்ள கப்பல்களின் பயிற்சியில் பங்கேற்பதற்காக செல்லும் வழியிலேயே ஐ.என்எஸ் விக்கிரமாதித்யா கொழும்புத் துறைமுகம் சென்றது.
சீனப் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணங்கள் தான், ஐ.என்எஸ் விக்கிரமாதித்யாவை, கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்தும் முடிவை எடுப்பதற்கு தூண்டுதலாக இருந்தது.
இந்தியாவின் இன்னொரு விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராட்டும், விசாகப்பட்டினத்துக்குப் பயணம் மேற்கொண்ட போதும், அது கொழும்பில் நிறுத்தப்படவில்லை.
இந்தியாவும் இலங்கையும் வரலாற்று ரீதியாக மிகவும் இயல்பான பல பரிமாண உறவுகளைக் கொண்டிருக்கின்றன. இந்திய- இலங்கை கடற்படைகளும் கூட, ஆழமான உறவுகளைக் கொண்டிருக்கின்றன” என்றும் அவர் தெரிவிததுள்ளார்.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு இந்தியாவின் இரண்டு நிபந்தனைகள்
.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர்வதற்கு அனுமதி அளிக்க இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா இரண்டு நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் இராணுவ மூலோபாயத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கருதி இந்தியா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
எனினம், சீனாவுடனான இராஜதந்திர உறவுகளைப் பாதிக்கும் என்பதால், இந்த திட்டத்தை தொடர அனுமதிக்க வேண்டிய நிலையில் சிறிலங்கா இருக்கிறது. இதனை இலங்கை அதிகாரிகள் இந்தியாவிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
இந்தநிலையில் இந்த திட்டத்தை தொடர அனுமதிப்பதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. ஆனால், இரண்டு நிபந்தனைகளை இந்தியா விதித்துள்ளது.
கொழும்புத் துறைமுக நகரத்தில் சீனாவுக்கு நில உரிமை வழங்கப்படக் கூடாது, கொழும்புக்கு அருகே சீன நீர்மூழ்கிகளை நடமாட அனுமதிக்கக் கூடாது ஆகிய இரண்டு நிபந்தனைகளையுமே இந்தியா விதித்துள்ளது.