கொலை செய்ய முயன்ற விடுதலைப் புலிக்கு சிறீசேனா மன்னிப்பு: சிறையிலிருந்து விடுவிக்க உத்தரவு
09 Jan,2016
கொலை செய்ய முயன்ற விடுதலைப் புலிக்கு சிறீசேனா மன்னிப்பு: சிறையிலிருந்து விடுவிக்க உத்தரவு
தன்னைக் கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரை மன்னித்து, அவரை விடுவிக்குமாறு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, கடந்த 2005-ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தார். அப்போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிவராஜா ஜெனீவன் (36), அவரைக் கொல்வதற்கு முயன்றார்.
இது தொடர்பான வழக்கில் 2006-ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட சிவராஜாவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து புலனருவா நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இந்நிலையில் இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபட்சவை தோற்கடித்து, சிறீசேனா அதிபர் பதவியைக் கைப்பற்றினார். இனரீதியாக பிளவுபட்டுள்ள இலங்கையில் பெரும்பான்மையான சிங்கள மக்களைப் போல், தமிழர்கள், சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் ஆகியோரிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகவும், ஊழலை முடிவுக்கு கொண்டுவருவதாகவும் கூறி, ஆட்சியைப் பிடித்தார் சிறீசேனா. அதைத் தொடர்ந்து தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சிறீசேனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட சிவராஜா ஜெனீவனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரை விடுவிக்க தற்போது உத்தரவிட்டுள்ளார்.