திருச்சி தடுப்பு முகாமில் ஈழத்தமிழர் தற்கொலை முயற்சி
02 Oct,2015

திருச்சி தடுப்பு முகாமில் ஈழத்தமிழர் தற்கொலை முயற்சி
தமிழகம் – திருச்சி தடுப்பு முகாமில் ஈழத்தமிழர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரேஷ்குமார் ஜானசௌந்தரம் என்பவரே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சிகிச்சையை பெற்றுக்கொள்ளவதற்காக தமிழகத்திற்கு சென்ற அவரை தமிழகம் திருச்சி தடுப்பு முகாமில் தடுத்து வைத்துள்ளனர்.
முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நிலையில் தடுப்பு முகாமில் வசித்துவரும் குறித்த நபர் யாருடைய உதவியுமின்றி அங்கு வசித்து வருவதாகவும், உதவிக்கு ஒருவரை நியமிக்குமாறு பல மனுக்களை தமிழக அரசிற்கு வழங்கிய போதும் அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை திருச்சி தடுப்பு முகாமிலுள்ளவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறுகோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக சிறபபு முகாம்களில் 10 ஈழ அகதிகள் உண்ணாவிரதப் போரட்டம்
தமிழ்நாடு சிறப்பு முகாம்களிலுள்ள 10 ஈழ அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் குறிப்பிடுகின்றன. திருச்சி மற்றும் சென்னையில் அமைந்துள்ள சிறப்பு முகாம்களில் இவர்கள் நேற்று வியாழக்கிழமை இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
தமிழ் நாடு அரசும், கியூ பிரிவு பொலிஸாரும் தங்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியே இவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முடிவடைந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி தங்களை சிறப்பு முகாம்களிலிருந்து விடுதலை செய்வதாக கியூ பொலிசாரும், தமிழ்நாடு அரசும் வாக்குறுதியளித்திருந்ததாகவும், இந்த நாள் கடந்த நிலையில் இதுவரையில் விடுதலைச் செய்யப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 அகதிகளில், 6 பேர், விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சி செய்தார்கள் என்றக் குற்றச்சாட்டிலும், ஏனைய நால்வர் ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் தப்பிச் செல்ல முயற்சித்த குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது