இராணுவ பயிற்சி இந்தியாவும் இலங்கையும் இணைவு.
28 Sep,2015

புனேயில் 14 நாள் கூட்டு இராணுவ பயிற்சி : இந்தியாவும் இலங்கையும் இணைவு.
மத்திய அரசு மேற்கொண்டு வரும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக, மகாராஷ்டிர மாநிலம் புனேவிலுள்ள இராணுவ முகாமில் இந்தியாவும் இலங்கையும் இணைந்து 14 நாள் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளன.
இது பற்றி இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
”மித்ர சக்தி பயிற்சி” திட்டத்தில் இந்தியாவும் இலங்கையும் கூட்டு இராணுவ பயிற்சியில் ஏற்கனவே ஈடுபட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சி புனேவிலுள்ள அவுந்த் இராணுவ முகாமில் நாளை (29ஆம் திகதி) முதல் நடைபெறும். நாடுகளிடையே அமைதி, வளர்ச்சி, மண்டல அளவில் நிலைத்தன்மை நீடிக்கவும் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது.
அதோடு, இரு தரப்பு இராணுவ உறவுகள் வலுப்படவும், நம்பிக்கை நீடிக்கவும், பரஸ்பர ஒற்றுமை ஓங்கவும், தீவிரவாத தேடுதல் வேட்டையில் இணைந்து பணியாற்றவும், இராணுவ சக்திகளுக்கிடையே மதிப்பு ஏற்படவும், புரிந்துணர்வு நிலைக்கவும் இந்த பயிற்சி உதவும் என்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய, இலங்கை இராணுவங்களுக்கிடையே அடிப்படை இராணுவத் திறன் வளர்ப்பு, இராணுவ நடவடிக்கைகளின்போது, பல்வேறு கட்டங்களில் செயலாற்றும் திறமை, திறமைகளை பகிர்ந்து கொள்ளுதல் என பலவகை செயல்பாடுகள் பயிற்சியில் நடைபெறும்.
மேலும் மூன்றாவது முறையாக நடைபெறும் இந்த இராணுவ பயிற்சியின் இறுதி கட்டமாக, அக்டோபர் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் இரு தரப்பு மூத்த இராணுவ பார்வையாளர்கள் பங்கேற்று பயிற்சி வகுப்பு நடத்த உள்ளதாக குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.